ஸ்ரீ பாலத்ரிபுர சுந்தரி பற்றி ஓர் பதிவு

அம்பிகையைப் பல வடிவங்களில் நாம் வழிபடுகிறோம். அவற்றில் அம்பிகையை ஒன்பது வயதுக் குழந்தை வடிவமாக, பாலாவாக, வழிபடுவது தொன்று தொட்டு வந்துள்ளது. அந்த அம்பிகையையே பால திரிபுரசுந்தரி என்று அழைக்கிறோம். அந்த அம்மையின் அருளையும், பெருமைகளையும் சொல்ல வார்த்தைகளே இல்லை. ஸ்ரீ ராஜேஸ்வரியாகிய பராசக்தி தானே விரும்பி எடுத்துக் கொண்ட ஒன்பது வயதான பால வடிவம்தான் ஸ்ரீ பாலத்ரிபுர சுந்தரி வடிவம்!

சித்தர்கள் அவளை “வாலை’ என்றே அழைப்பர். அகஸ்தியர், திருமூலர், போகர், கொங்கணர், கருவூரார் என பல சித்தர்களும் வணங்கிய சக்தி மிக்க பாலாவை வணங்கினால் நோய்கள் விலகும். வாழ்வில் மேன்மேலும் வளமும், கல்வி கேள்விகளில் சிறந்த ஞானமும் கிடைக்கும். வாலையை வேண்டினால் கல்யாணம், குழந்தை, குடும்ப ஐஸ்வர்யம் ஆகிய வரங்களை அள்ளித்தருபவள் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.

பாலா என்னும் பாலா திரிபுரசுந்தரி ஆராதனையே தேவி வழிபாட்டில் முதல் படி என்பர். ஸ்ரீ வித்யையில் பாலாவின் மந்த்ரமே மூலமாகும். ஸ்ரீ வித்யாவின் பல பெரிய மந்த்ரங்கள் தரும் பலன் அனைத்தையும் இந்த முதல் மந்த்ரமே தந்துவிடுவதால் இம்மந்த்ரம் “லகு ஸ்ரீ வித்யா” என்றும் அழைக்கப்படுகிறது.

ஸ்ரீ பாலா எப்பொழுது தோன்றினாள்? மன்மதனை ஈசன் எரித்த சாம்பலிலிருந்து தோன்றியவன் ” பண்டன்” எனும் அரக்கன். ஒரு பெண்ணை தவிர தனக்கு யாராலும் மரணம் நேரக்கூடாது என வரம் பெற்றான். அந்த சந்தோஷத்தில் தேவர்களையும் , மற்றவர்களையும் துன்புறுத்தினான். அவர்கள் ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியைச் சரணடைய, தேவி தன் சேனை சஹிதமாக பண்டாசுரனோடு போர் புரியத் தொடங்கினாள். அன்னை லலிதா தேவியோடு போரிட்டு வெல்ல முடியாத பண்டாசுரன், வலிமை மிக்க தனது முப்பது மைந்தர்களை போருக்கு அனுப்பினான். பண்டாசுரனுக்கு ஈடான அவர்களை அழிக்க ஸ்ரீ லலிதா தேவியின் உடலிலிருந்து ஆவிர்பவித்தாள் அண்டத்தைக் காக்கும் அம்பிகையின் செல்ல மகளான ஸ்ரீ பாலா. அவள் உருவில் இளையவளானாலும் ஆற்றலில் வலியவள்.

லலிதாவின் மகளான பாலா தன் அன்னை லலிதாவிடம் கவசங்களையும், ஆயுதங்களையும் பெற்று வெள்ளை அன்னங்கள் பூட்டிய ரதத்தில் ஏறிக்கொண்டு, பண்டாசுரன் மகன்களுடன் போரிட்டு அனைவரையும் அழித்தாள். பண்டனின் புதல்வர்கள் முப்பது பேரையும் அழித்ததால் “பண்டபுத்ர வதோத்யுக்த பாலா விக்ரம நந்திதா’ ஸ்ரீபாலா லீலாவிநோதி நீ – எனவும் லலிதா ஸஹஸ்ர நாமத்தில் வஸின்யாதி வாக்தேவதைகள் இந்த தேவியைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.

அவள் போரிடும் லாவகத்தைக் காண விண்ணில் கூடிய தேவர்கள் பூமாரி பொழிந்தனர். போரில் வெற்றியுடன் திரும்பிய குழந்தை பாலாவை ஆனந்தம் பெருக தன்னுடன் அணைத்துக் கொண்டாள் அம்பிகை. அன்னை லலிதாவோடு அப்படியே ஐக்கியமாகிவிட்டாள் என்கிறது புராணம். ஆம்! பாலாம்பிகை வேறு, லலிதாம்பிகை வேறல்ல. இருவரும் ஒருவரே!

அத்தகு பெருமை பெற்ற ஸ்ரீ பாலாவின் திருக்கோயில்கள் ஒரு சிலவே தமிழகத்தில் உள்ளன. செங்கல்பட்டு அடுத்த செம்பாக்கத்தில் ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் கோயில் அருகில் ஸ்ரீமத் ஒளஷத லலிதா மஹா த்ரிபுரசுந்தரி ஸ்ரீசக்ர ராஜசபை ஸ்ரீபீடம் ஸ்ரீபாலா சமஸ்தான ஆலயம் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் மஹாசஹஸ்ர லிங்கம், ஸ்ரீ பால த்ரிபுரசுந்தரி, தருணி த்ரிபுரசுந்தரி, ஸ்ரீ சக்ரம், ஸ்ரீவாராஹி, ஸ்ரீமாதங்கி உள்ளிட்ட மூர்த்திகள் அருள்பாலிக்கின்றனர்.

இந்த ஆலயத்தில் நடைபெறும் வசந்த நவராத்ரி திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சி பண்டாசுர சம்ஹாரம். தமிழகத்திலேயே இங்குதான் இந்நிகழ்ச்சி, மிகவும் விமர்சையாக ஆண்டு தோறும் நடைபெறுகிறது.