மெரிக்காவில் விஸ்கான்சில் உள்ள த்ரி ஸ்கொயர் மார்க்கெட் (Three Square Market) என்ற நிறுவனம் தம்மிடம் பணியாற்றும் 40 பணி யாளர்களின் உடலில் மைக்ரோசிப்புகளைப் பொருத்தியுள்ளது தொடர்பாக அண்மையில் செய்தி வெளியாகியிருந்தது.

அந்த மைக்ரோசிப்பைப் பற்றி சுவாரசியமான தகவல்களைக் காணமுடிந்தது. உரிய பணியாளர் அறைக்குள் செல்லும்போது அங்கு பணியாற்றும் சக பணியாளர்களுடைய மைக்ரோசிப்புகளுடன் இணைப்பு கிடைக்கும். திரையில் அவர்களைப் பார்க்கலாம், அவர்களுடைய பணிகள், குணநலன்கள், நடந்துகொள்ளும் முறை, குறைகள் நிறைகள் உள்ளிட்டவற்றை அறியலாம்.

“இது ஒரு மைக்ரோசிப் மட்டுமே. ஒருவர் நாள் முழுதும் 24 மணி நேரத்திற்கு ஒரு தொலை பேசியை வைத்திருந்தாலே அவர் மைக்ரோசிப் வைத்துள்ளதாக பொருள் கொள்ளலாம். அவ்வகையில் இதனைப் பற்றி எவரும் கவலை கொள்ளவேண்டாம்” என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.  (நன்றி : இன்டிபென்டன்ட்)

இதுவரை ரோபோக்கள் நம் பணிகளை மேற்கொள்வதைப் பார்த்துள்ளோம். இது சற்றே மாறு பட்டது.  கட்டை விரலுக்கும் பெருவிரலுக்குமிடையே பொருத்தப்படுகின்ற இந்த மைக்ரோசிப்பா னது ஒரு அரிசி அளவானது. கையைத் தூக்காமலேயே பல பணிகளை எளிதாகச் செய்யமுடியும்.

இம்முறை அறிமுகப்படுத்தவுள்ளது என்று கேள்விப்பட்டபோது பல பணியாளர்கள் வியந்தார்க ளாம், சற்றே யோசித்தார்களாம். பின்னர் பலர் இந்த முறையை ஏற்றுக்கொண்டார்களாம்.

ஒரு நபருக்குப் பொருத்த 300 அமெரிக்க டாலர் செலவாவதாகவும், அச்செலவினை அந்நிறுவ னமே ஏற்றுக்கொள்வதாகவும் இம்முறை யினால் எந்த தீங்கும் கிடையாது என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

இந்த முறை பாதுகாப்பானது என்பதை நிரூபிப்பதற்காக முதலில் தன் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் பொருத்தப்படவுள்ளதாக அந்நிறுவனத்தின் அலுவலர் தெரிவித்துள்ளார்.

பணியாளர்கள் மனம் மாறி தனக்கு அது தேவையில்லை என்று நினைத்தால் அதனை வெளியில் எடுத்துவிடலாம்.  இன்டர்நெட் இணைப்பு அதற்குக் கிடையாது என்றும் இதுவும் ஒரு வகையான கிரடிட் கார்ட் போலவே என்கிறது அந்நிறுவனம். அலுவலக அறையின் கதவைத் திறத்தல், நகலெடுக்கும் இயந்திரத்தினைப் பயன்படுத்துதல், கணிப்பொறியில் புகுபதிகை (log in) செய்து உள்ளே செல்லல், தொலைபேசிகளைத் திறத்தல் (unlock), வணிக நோக்கிலான அட்டைகளை பரிமாறிக்கொள்ளல், மருத்துவ/உடல் நலம் பற்றிய தகவல்களைப் பதிந்துவைத்துக்கொள்ளல் என்ற பல நிலைகளில் இது உதவும்.

இத்திட்டமானது த்ரி ஸ்கொயர் மார்க்கெட் நிறுவனத்தாலும் ஸ்வீடன் நாட்டு நிறுவனமான பயோகாக்ஸ் இன்டர்னேஷனல் நிறுவனத்தாலும் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது.

அமெரிக்காவில் முதன்முறையாக இங்குதான் அறிமுகப்படுத்தப்படுகிறது என்று கூறப்பட்ட போதிலும், ஸ்வீடனைச் சேர்ந்த எபிசென்ட்டர் என்ற நிறுவனம் இந்த முறையை முன்னரே அறிமுகப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

பிரைவசி மற்றும் உடல் நலன் என்ற நிலையில் பல கேள்விகளை இந்த முறையானது எழுப்பு கிறது. முதலில் ஏதோ சதி என்று நினைக்கப் பட்டபோதிலும் பின்னர் அது அவ்வாறல்ல என்பதும் பணியாளர்கள் இதனை ஏற்பதாகவும் கூறப்படுகிறது.

கருப்புப்பூனை (Black Cat) திரைப்படம்

இந்த மைக்ரோசிப் பற்றிய செய்தியைப் படித்தபோது 1991இல் நான் பார்த்த The Black Cat என்ற திரைப்படம் நிறைவிற்கு வந்தது. ஸ்டீபன் ஷீன் (Stephen Shin) தயாரித்த அத்திரைப்படத்தில் ஜேட் லியூங், காத்தரினாக நடித்துள்ளார்.

எதிர்பாரா விதமாக அவர் ஒரு டிரக் டிரைவரை கொன்றுவிடுகிறார். விசாரணையிலிருந்து தப்பிக்கும்போது அவர் பிடிக்கப்படுகிறார்.

அவருடைய மூளையில் கருப்புப்பூனை சிப் (“Black Cat” chip) செலுத்தப்படுகிறது. அவர் முழுக்க முழுக்க அமெரிக்க உளவுத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுகிறாள். அது அவளை எரிக்கா எனப்படுகின்ற உளவுத்துறை ஏஜென்டாக மாற்றிவிடுகிறது.

அவ்வப்போது கதாநாயகி, அவளுக்கு இடப்படுகின்ற ஆணைக்கேற்ப உரிய நபரைக் கொலை செய்வார். அவ்வா றான இலக்கில் ஒருவர் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருப்பார்.  சிறிது நேர இடைவெளியில் குளத்திற்கு வெளியே வந்து வெளியில் உட்கார்ந்துகொண்டு குளத்தில் இரு கால்களையும் விட்டுக் கொண்டு அமர்ந்திருப்பார்.

கதாநாயகி நீச்சல் குளத்தில் நீரின் அடியாக வந்து யாரும் எதிர்பாராத வகையில் அவரைக் கொன்றுவிடுவார். அவருக்கோ அருகில் உள்ளவர்களுக்கோ என்ன நடந்தது என்றே தெரியாது. அதற்காக அவர் மேற்கொள்கின்ற உத்தி ஒவ்வொரு முறையும் வித்தியாசமாக இருக்கும். அப்பணி முடிந்தபின் சிப் மூலமாக பெறுகின்ற கட்டளையின்படி திரும்ப வந்துவிடுவார். ஒவ்வொரு முறையும் இவ்வாறாகக் பணியை முடித்த பின் தலையைப் பிடித்துக் கொண்டு அழுவார், துடிப்பார். பார்க்க வேதனையாக இருக்கும். அவள் செய்தது, செய்துகொண்டிருப்பது, செய்யப்போவது அவளுக்கே தெரியாது.

தனியொருவன் திரைப்படம்

அண்மையில் ஜெயம் ரவி நடித்து வெளியான தனியொருவன் திரைப்படத்திலும் இதுபோன்ற கதையமைப்பினைக் காணமுடிந்தது. அவருக்குத் தெரியாமல் அவருடைய உடம்பில் மைக்ரோசிப் பொருத்தப்பட்டு அவர் படாத பாடு படுவார். கதை விறுவிறுப்பாக இருக்கும்.

இவ்வாறான மைக்ரோசிப் தொடர்பான திரைப்படங்களோடு ஒப்புநோக்கும்போது இந்த முறையானது சாதகங்களைவிட அதிகமான பாதகங்களையே தருமோ என சிந்திக்கத் தோன்றுகிறது.

மனிதர்களை இயந்திரங்களாக ஆக்கிக் கொண்டிருக்கின்றனர். அதே சமயத்தில் பிரைவசி என்று ஒரு பக்கம் கூப்பாடு போட்டுக் கொண்டும் இருக்கின்றார்கள்.  ஆபத்து இல்லை என்று நிறுவனங்கள் கூறும்போதிலும்கூட இம்மாதிரியான உத்திகளால் ஏற்படுகின்ற விளைவினை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அணுகுண்டு கண்டுபிடிப்பு முதல் க்ளோனிங் எனப்படுகின்ற படியாக்கம் வரை அறிவியல் கண்டுபிடிப்புகளும் உத்திகளும் அறிமுகமாகும்போது எதிர்மறைக் கண்ணோட்டத்திலேயே பார்க்கப்பட்டன.  இப்போதும் நாம் அவ்வாறே அணுகும் கண்ணோட்டத்தில் உள்ளோம்.

இருந்தாலும் இதன் விளைவுகளை பொறுத்திருந்து பார்ப்போம்.