கவிஞர் கண்ணதாசன் ஒரு குழந்தை!

சிறப்புக்கட்டுரை: எம்.பி.திருஞானம்

கவிஞர் கண்ணதாசன், அவரது பெற்றோர்களுக்கு எட்டாவதாய் பிறந்தவர் ! கண்ண  பரமாத்மா, அவரது பெற்றோர்களுக்கு எட்டாவதாய் பிறந்தவர். இயல்பாகவே, எட்டாவதாய் பிறக்கின்ற பிள்ளைகள் போற்றத்தக்க, பாராட்டத்தக்க குணங்களைக் கொண்டிருப்பார்கள்.

கவிஞர் கண்ணதாசன் , 8-ம் வகுப்பை முடிக்காதவர். ஆனால்  B.O.L. D.O.L. படித்த தமிழ் புலவர்கள் , அறிஞர்களே வியக்கும்படியான தமிழ் அறிவைப் பெற்றிருப்பது , அதிசயமான ஒன்று.

செட்டிநாட்டுப் பிள்ளையான கண்ணதாசன் என்கிற முத்தையா , சொல்லிக் கொள்ளும்படியான பொருளாதாரப் பின்னணிகள் ஏதும் இல்லாதவர்.

சென்னையின் வடக்கே அமைந்துள்ள, திருவொற்றியூரில் உள்ள தொழிற்சாலையில் கூலி வேலைப் பார்க்க வந்த கண்ணதாசன் திருவொற்றியூரில் அமைந்துள்ள பட்டினத்தார் நினைவிடத் தில் பசியோடு தூங்கினார். அடுத்த நாள் காலையில் தனக்கு ஏதோ ஓர் ஒளி தன்னுள் படர்ந்ததாக உணர்கிறார்.

வேலைத் தேடும் வேலைக்கு முற்றுப் புள்ளி வைக்கிறார்.

திரைப்படப் பாடலால் புகழ்பெற்ற கண்ணதாசன்,   கவிதை, கட்டுரை, புதினம், பத்திரிக்கை, அரசியல், ஆன்மீகம், மேடைப்பேச்சு , திரைப்படத் தயாரிப்பு , நடிப்பு என பல்வேறு துறைகளிலும் கால்பதித்த அற்புத மனிதர் கண்ணதாசன்.

சினிமாவுக்கு பாடல் எழுதுவதாக இருந்தாலும், பத்திரிகைகளுக்கு கவிதை எழுதுவது என்றாலும், சூழ்நிலைக்கு ஏற்ப -பொருளுக்கு ஏற்ப வார்த்தைகள் வரிசைக்காட்டி நிற்கும். இதை நானே பலமுறை நேரில் பார்த்திருக்கிறேன்.

இவரது திரைப்பாடல்கள் , ஆயிரக்கணக்கான தமிழ் அறிந்த மக்களை நல்வழிப்படுத்தியிருக்கும் என்பது எனது கருத்து. கவிஞர் கண்ணதாசன் எழுதிய “மயக்கமா ? கலக்கமா? மனதிலே குழப்பமா?” என்ற பாடல்தான் வாழ்க்கையை வெறுத்து, ஒடுங்கி நின்ற கவிஞர் வாலியை , நிமிர்ந்து நடக்க வைத்து , சிறந்த கவிஞராக உயர வைத்தது, இந்த தகவலை வாலியே நூறு சந்தர்பங்களில் சொல்லி பதிவு செய்துள்ளார்.

இதேப்போல் இன்னொரு சம்பவம்!

பாவமன்னிப்பு படத்தில் வரும் ஒரு பாடலில் “காலம் ஒரு நாள் மாறும் என் கவலைகள் யாவும் தீரும்” என்ற உற்சாக வரிகள்தான் , எனக்குள் நம்பிக்கையை விதைத்து , இப்போது இந்த அளவுக்கு, உயர்ந்து நிற்கிறேன் என்று தமிழக அரசின் அரசவையில் கவிஞராக – கவிஞர் கண்ண தாசனுக்குப்பிறகு பொறுப்பு வகித்த கவிஞர் முத்துலிங்கம் சமீபத்தில் பதிவு செய்துள்ளார்.

வாழ்க்கையில் தோற்றவர்களும், வாழ்க்கையை வெறுத்து தற்கொலைக்கு முயன்றவர்களும் ஆயிரமாயிரம் பேர், கவிஞர் கண்ணதாசனின் கருத்துமிக்க பாடலை கேட்டு,  தற்கொலை முயற்சியை  கைவிட்டு புதிய வாழ்க்கையை மேற்கொண்டவர்கள் ஏராளம்….  ஏராளம்…

“கவிஞர் கண்ணதாசன் ஒரு குழந்தை மாதிரி” என்று பலரும் சொல்லுவார்கள்! அது நூறு சதம் உண்மை. வெளுத்ததெல்லாம் பால் என்று நினைப்பார். தனக்குப் பிடித்த தலைவர்களை ஏற்றிப் போற்றுவதும்,  பிடிக்காத நபர்களை, மனம்போன போக்கில் தாக்குவதும்… இந்த இரண்டு  நிலைப் பாட்டிலும், சுயநலம் என்பதே இருக்காது. பணம் பதவிக்காக அவர் எப்போதும் ஆசைப்பட்டது இல்லை.

எப்போதும் உணர்ச்சிப் பிழம்பாகவே  காணப்படுபவர்,  கவிஞர் கண்ணதாசன்.

தி.மு.க.வில் இருந்தபோது,  “திராவிட நாடு பார்க்காமல் இந்த கட்டை சாகாது, செத்தாலும் வேகாது” என்று  உணர்ச்சிப் பிழம்பாகப்  பேசி கைதட்டல் பெறுவார்!

தி.மு.க.விலிருந்து ஈ.வெ.கி சம்பத்துடன் வெளியேறிய கவிஞர் கண்ணதாசன் , திராவிட நாடு கொள்கையை கைவிட்டு விட்டதாக அண்ணா அறிவித்ததும், திராவிட நாடு கொள்கைக்கு நீத்தார் நினைவுநாள் கவியரங்கம் நடத்தினார். பாராட்டுப் பெற்றார்!

எல்லாத் துறைகளிலும் வெற்றிப் பெற்ற கண்ணதாசன் , அரசியலில் தோல்வியடைந்ததை வைத்தே சொல்லலாம், அவர் பொய் சொல்லத் தெரியாத, வளைந்து நிற்க விரும்பாத, நிமிர்ந்தப் பேர் வழி என்று!

கவிஞரிடம் சபாஷ் பெற்ற அரசியல் தலைவர்களில் பெரும்பாலானவர்கள், தாக்குதலுக்கும் ஆளாகியிருக்கிறார்கள். அந்தப் பட்டியலில் தலைவர் காமராஜரும் அடக்கம்!

காங்கிரஸ் கட்சி 1969 இறுதியில் இரண்டாக உடைந்தது. ஸ்தாபன காங்கிரஸ் , இந்திரா காங்கிரஸ் என்று பிளவுப்பட்டபோது,  இந்திரா காந்தி பக்கம் நின்று, ‘செவத்தம்மா’  என்ற அற்புதமான கவிதையை எழுதினார்!

இந்திரா காந்தியின் தலைமையிலான காங்கிரஸ், தி.மு.க.வுடன் நெருக்கமானபோது, கவிஞரும் கருணாநிதியோடு நெருக்கமாகி, கருணாநிதிக்கு கலைவாணர் அரங்கில் அட்டகாசமான பிறந்தநாள் விழா எடுத்து சிறப்பித்தார்!

கருணாநிதியை நேற்றுவரை பரம எதிரியாக கருதி செயல்பட்டவர் கவிஞர், ஆனால் திடீரென்று , கருணாநிதியைப் பாராட்டி விழா நடத்தியபோது, காசுக்காக , பதவிக்காக கவிஞர் தடம் மாறிவிட்டார் என்று யாரும் சொல்லவில்லை!

  • ஏனென்றால் அவர்களுக்குத் தெரியும் கவிஞர் ஒரு குழந்தை மனசுக்காரர் என்று!