அரியலூர்,

பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட அரியலூர் நந்தினியின் கொலைக்கு நீதி கேட்டு வரும் 10ந்தேதி திமுக. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

அரியலூரில் கடந்த 14ந்தேதி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட  நந்தினியின் வீட்டிற்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறினார். மேலும் திமுக சார்பாக ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார்.

அதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட நந்தினி கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என்றும், மேலும் இந்த கொலைக்கு நீதி கேட்டு,  திமுக சார்பில் பிப்ரவரி 10ல் ஆர்ப்பாட்டம் அரியலூரில்  நடத்தப்படும என்றும் கூறினார்.

மேலும் இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதததில் கூறியிருப்பதாவது.

நந்தினி கொலையும் தமிழ்நாட்டின் நிலையும் என்ற தலைப்பில் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,

உயிரினும் மேலான தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் வேதனை மடல்.

பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகம் மாறிக் கொண்டிருக்கிறதோ என்ற அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது அரியலூர் மாவட்டதைச் சேர்ந்த நந்தினிக்கு ஏற்பட்ட பாலியல் கொடூர மரணம்.

அரியலூர் அருகேயுள்ள சிறுகடம்பூரைச் சேர்ந்த 16 வயது பெண் நந்தினி, தாழ்த்தப்பட்ட சமுதா யத்தைச் சேர்ந்தவர். கடந்த ஆண்டு டிசம்பர் 26 அன்று நந்தினி காணாமல் போனது குறித்து அவரது பெற்றோரால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் இந்தப் புகாரை அலட்சியப்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் தான், ஜனவரி 14ந் தேதியன்று கீழமாளிகை கிராமத்தில் ஒரு கிணற்றிலிருந்து மோசமான நிலையில் நந்தினியின் சடலம் மீட்கப்பட்டது. அவரைக் கொலை செய்தவர்கள் யார் என்ற விசாரணையில், சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த இந்து முன்னணி அமைப்பின் பிரமுக ரான மணிகண்டன் என்பவர் தனது நண்பர்களுடன் இணைந்து நந்தினியை கொலை செய்து கிணற்றில் வீசியது தெரிய வந்தது.

அதிலும் நந்தினி கர்ப்பமாக்கப்பட்டார் என்பதும், அவரது வயிற்றைக் கிழித்து, கருவைக் கொன்று, அதன் காரணமாக அவரும் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்கிற கொடூரச் செய்தி எல்லோரது காதுகளையும் இடிபோலத் தாக்கியது.

நந்தினியைக் கொடூரக் கொலை செய்தவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினரும் குரல் எழுப்பினர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அரியலூர் மாவட்டக் கழகச் செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கரன் அவர்கள், நந்தினி விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து மணிகண்டனும் அவனது நண்பர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் மணிகண்டன் மீது குண்டர் சட்டமும் பாய்ந்திருக்கிறது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதற்கு நந்தினிக்கு நேர்ந்த கொடூரமும் அதன் விளைவாக அவர் கொலையானதுமே சாட்சியமாகும்.

நந்தினி

சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் இளம்பெண் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கின் மர்ம முடிச்சுகள் இன்னும் அவிழவில்லை. அவரைக் கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் ராம்குமாரும் மர்மமான முறையில் மரணமடைந்தார். ஆறாண்டு காலமாகத் தொடரும் அ.தி.மு.க ஆட்சியில் ஆறாத்துயரங்களை பெண்கள் அனுபவித்து வருகின்றனர்.

இந்தியத் தலைநகர் டில்லியில் நிர்பயா என்ற இளம்பெண் பேருந்தில் பாலியல் வன்முறைக்கு உள்ளாகி படுகொடூரமாக கொலையான சம்பவத்திற்குப் பிறகு, நாடு முழுவதும் பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டது.

அப்போது தமிழகத்திலும் ஸ்ரீவைகுண்டம் மாணவி புனிதா தொடங்கி பல இளம்பெண்கள் பாலியல் கொடுமைக்கு உள்ளாகிக் கொலை செய்யப்பட்டனர். அப்போது முதல்வ ராக இருந்த அம்மையார் ஜெயலலிதா அவர்கள், பெண்க ளின் பாதுகாப்புக்காக “13 அம்சங்கள் கொண்ட” சிறப்பு திட்டத்தை அறிவித்தார்.

அ.தி.மு.க அரசில் அறிவிக்கப்படுபவை எல்லாம் 110விதியின் கீழான அறிவிப்புகள் போல செயலுக்கு வராமல் முடங்கிப்போவது வழக்கம்தானே! பெண்கள் பாதுகாப்பு குறித்த திட்டமும் அப்படித்தான் ஆனது.

வேலை பார்க்கும் மகளிருக்கான விடுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு-பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் போன்ற அந்த அறிக்கையில் இருந்த அடிப்படையான அம்சங்களைக் கூட அ.தி.மு.க அரசு முழுமையாக நிறைவேற்றவில்லை. பாலியல் குற்றத்துக்கான கடும் தண்டனைகள் என்ற அறிவிப்பும் காற்றோடு போய்விட்டது.

இந்த நேரத்தில், தலைவர் கலைஞர் அவர்களின் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 1996-2001 தி.மு.க ஆட்சிக் காலத்தில், சென்னை எத்திராஜ் கல்லூரி மாணவி சரிகாஷா என்பவர் சில இளைஞர்களால் ஈவ்டீசிங் எனப்படும் வன்பகடிக்கு உள்ளாக்கப்பட்டு, விபத்துக்குள்ளாகி மரணமடைந்த போது, அது குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்ட அன்றைய முதல்வர் கருணாநிதி, ஈவ்டீசிங் தடுப்பு சட்டத்தையும் நிறைவேற்றி, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்கச் செய்தார்.

அந்த சட்டத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்தி, ஈவ்டீசிங் கொடுமையைக் கட்டுப் படுத்தினார். இந்த சட்டம் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த நீதியரசர் சந்துரு போன்றவர்களின் பாராட்டைப் பெற்றதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்தது தி.மு.கழக அரசு. ஆனால், பெண்கள் மீதான வன்முறை யும் பாலியல் தொல்லைகளும் படுகொலைகளும் அதிகரிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது அ.தி.மு.க அரசு. அதன் விளைவு தான், அரியலூர் மாவட்டம் சிறுகடம்பூர் நந்தினிக்கு ஏற்பட்டுள்ள கொடூரம்.

இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கோரி வருகின்ற 10ந் தேதி அன்று அரியலூர் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பி்ல் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும்.

நான் நேரடியாகச் சென்று நந்தினியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறி விட்டு உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று உறுதி அளித்து விட்டு வந்தேன்.

ஆகவே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு நேர்ந்த அவலத்திற்கு காரணமானவர்கள் எத்தகைய அரசியல் பின்னணி கொண்டவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நம்புகிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.