பொறியியல் படிப்புக்கான கட்டண உயர்வு விவரம்! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை:

ளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புக்கான கல்விக்கட்டணத்தை அண்ணா பல்கலைக்கழகம் அதிரடியாக உயர்த்தி உள்ளது. இந்த கட்டண உயர்வு அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் உறுப்பு கல்லூரிகளுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பேசிய அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா, பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் வரும் கல்வியாண்டில் உயர்த்தப்படும்  தெரிவித்திருந்தார். அதன்படி அண்ணா பல்கலைக்கழகம் கட்டண உயர்வுக்கு தமிழக அரசும் பச்சைக்கொடி காட்டியது.

இந்த நிலையில் புதிய கட்டண விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி,

இளநிலை பொறியியல்  படிப்புக்கான கட்டணம் 9 ஆயிரம் ரூபாயிலிருந்து 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதுபோல முதுநிலை படிப்புகளான எம்.பி.ஏ, எம்.சி.ஏ படிப்புகளுக்கான கட்டணம் 9 ஆயிரம் ரூபாயிலிரு‌ந்து 17 ஆயிரத்து 500 ரூபாயாக அதிகரித்துள்ளது.

எம்.இ, எம்.டெக் பொறியியல் முதுநிலை படிப்புகளுக்கான கட்டணம் 9 ஆயிரம் ரூபாயி‌ல் இருந்து 20 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இந்தக் கட்டண உயர்வு, அண்ணா பல்கலைக்கழக வளாகம் மற்றும் அதன் உறுப்புக்கல்லூரி களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும்,அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் இணைப்புக் கல்லூரிகளுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும்,  இந்த கட்டண உயர்வு நடப்பு (2019-20)  கல்வியாண்டிலிருந்தே புதிய கட்டணத்தை அமல்படுத்தப்படுவதாக தெரிவித்து உள்ளது.