பாலக்காடு

பாலக்காடு கோவில் திருவிழா ஊர்வலத்தில் ஆண் வேடத்தில் சென்ற பெண் யானைக்கு இனி திருவிழாக்களில் கலந்துக் கொள்ள தடை விதிக்க்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கோவில்களுக்கு என தனி விதி மற்றும் வழிமுறைகள் பின்பற்றப் படுகின்றன. அதில் குருவாயூர் கோவிலில் பெண்கள் புடவை, முண்டு போன்றவை மட்டுமே அணிந்து வர வேண்டும் என விதிகள் உண்டு. சபரிமலைக் கோவிலில் சிறுவயதுப் பெண்கள் வர அனுமதிக்கப்பட்டு அதனால் இன்று வரை கலவரங்கள் நிகழ்ந்து வருகின்றன.

மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் சில கட்டுப்பாடுகள் கேரள கோவில்களில் உள்ளன.  அவற்றில் ஒன்றாக திருவிழா ஊர்வல நேரத்தில் ஆண் யானைகள் மட்டுமே செல்ல வேண்டும் என விதி உள்ளது. சமீபத்தில் பூரம் திருவிழா கேரளாவில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் திருச்சூர் பூரம் விழா மிகவும் புகழ் பெற்றதாகும். இதில் ஏராளமான யானைகள் ஊர்வலமாக சென்றன.

பாலக்காட்டிலுள்ள தூத்தா பகவதி அம்மன் கோவிலில் பூரம் விழா நடந்தது. அதில் பெண் யானையான லக்கிடி இந்திரா என்னும் யானைக்கு ஆண் வேடமிட்டு கொல்லம்கோடு கேசவன் என பெயரிடப்பட்டு ஊர்வலத்தில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளது. லக்கிடி இந்திராவை ஆண் யானை என காட்ட அந்த யானக்கு போலி தந்தங்கள் அனிவிக்கபட்டுள்ளன.

இந்த விவரம் அறிந்த இந்த கோவில் நிர்வாகத்தினர் அடுத்த வருடம் நடைபெறும் திருவிழாவில் லக்கிடி இந்திரா எந்த ஒரு நிகழ்விலும் கலந்துக் கொள்ள தடை விதித்துள்ளனர்.

இது குறித்து கோவில் அலுவலர் ராமகிருஷ்ணன், “இந்த ஊர்வலத்தில் பெண் யானை ஆண் வேடத்தில் கலந்துக் கொண்டது உண்மைதான். உயர வாரியாக யானைகள் ஊர்வலம் நடந்த போது ஒரு குறிப்பிட்ட பிரிவில் கலந்துக் கொள்ள யானை இல்லை. அதனால் இந்த யானையை கலந்துக் கொள்ள செய்துள்ளனர். பெரும்பாலான யானைகள் திருச்சூர் விழாவுக்கு சென்றுள்ளதால் பற்றாக்குறை ஏற்படவே இது போல் நடந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.