சென்னை,

ந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா அக்கா மகன் பாஸ்கரன், சுதாகரன் எழும்பூர் பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் இன்று ஆஜராகினர். அவர்கள்மீதான குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

ஜெயா டிவியின்,  சூப்பர் டூப்பர் டி.வி.க்கு வெளிநாட்டில் இருந்து சாதனங்கள் இறக்குமதி செய்தபோது, மோசடி நடைபெற்றதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.

கடந்த 1996ம் ஆண்டு பதியப்பட்ட வழக்கில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் விசாரணை சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. கடந்த 7ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது, சுதாகரன் ஆஜராகாததால், அவரை நேரில் ஆஜர்படுத்த கோர்ட்டு உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் இருந்த சுதாகரன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான பாஸ்கரனும் இன்று கோர்ட்டில் ஆஜரானார். விசாரணையின்போது, இருவர்மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

அப்போது, குற்றச்சாட்டை மறுத்த இருவரும், இந்த வழக்கில் சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினர்.

இதைத்தொடர்ந்து வழக்கை ஜூலை 13ந்தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும், அப்போது சுதாகரனை மீண்டும் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி கூறினார்.