பெரா வழக்கு: ஜூன் 8ந்தேதி டி.டி.வி.தினகரனை ஆஜர்படுத்த வேண்டும்! கோர்ட்டு உத்தரவு!

சென்னை,

ந்நிய செலாவணி மோசடி வழக்கில் வரும் ஜூன் 8ந்தேதி விசாரணைக்கு டிடிவி தினகரனை கண்டிப்பாக ஆஜர்படுத்த வேண்டும் என்று பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

டிடிவி தினகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு எழும்பூர் பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது டிடிவி தினகரன் ஆஜர் ஆகவில்லை. அதைத்தொடர்ந்து இன்றைய விசாரணைக்கு அவரை ஆஜர்படுத்த கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இன்றைய விசாரணையின்போது டிடிவி தினகரன் ஆஜர் ஆகவில்லை. அவர் டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.

அதைத்தொடர்ந்து அடுத்த விசாரணையின்போது, டி.டி.வி.தினகரனை கண்டிப்பாக ஆஜர்படுத்த வேண்டும் என்று  காவல்துறைக்கு எழும்பூர் நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது. இதைத்தொடர்ந்து விசாரணை ஜூன் 8ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

டி.டி.வி.தினகரனின் வங்கிக் கணக்குகளில் வெளிநாட்டில் இருந்து பெரும் தொகை டெபாசிட் செய்யப்பட்டது. இந்த மோசடி  1995, 1996-ம் ஆண்டுகளில் நடைபெற்றது.  இதையடுத்து, தினகரன் மீது அந்நியச் செலாவணி மோசடி வழக்கை அமலாக்கத்துறை பதிவுசெய்து அபராதம் விதித்து.

இந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் மாதம் 22ந் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, டி.டி.வி.தினகரன்  ஆஜரானார். அதையடுத்து கடந்த 10ம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது சசிகலாவின் உறவினர் பாஸ்கரன் மட்டும் ஆஜரானார்.

இந்த வழக்கில் தொடர்புடைய  தினகரன், சுதாகரன் ஆகியோர் ஆஜராகவில்லை. அப்போது, சுதாகரனுக்கு வாரன்ட் பிறப்பித்த நீதிமன்றம், ஜூன் 8ஆம் தேதி ஆஜராக உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.