பெரா வழக்கு: நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் ஆஜர்! விரைவில் தீர்ப்பு?

சென்னை,

வெளிநாட்டில் இருந்து சொகுசு கார் இறக்குமதி செய்து வரி ஏய்ப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தற்போது சசிஅணி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் டிடிவி தினகரனுக்கு இரண்டு ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது.

தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்த வழக்கு சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

வழக்கின் விசாரணைக்கு  இன்று நேரில் ஆஜரானார் டிடிவி தினகரன். இதன் நீதிமன்ற வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

கடந்த 1994ஆம் ஆண்டு, லண்டனில் இருந்து, ‘லெக்சஸ்’ என்ற சொகுசு காரை, பழைய கார் என ஏமாற்றி இறக்குமதி செய்ததில், ரூ.1 கோடி அளவில்  வரி ஏய்ப்பு செய்ததாக அவர்மீது ‘பெரா’ வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சிறை தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விரைந்து முடிக்க  சிபிஐ கோரியிருந்தது.

அதைத்தொடர்ந்து வழக்கின் இறுதி விசாரணை பிப்ரவரி 27ஆம் தேதி நடக்கும் என நீதிபதிகள் அறிவித்தனர். அதையடுத்து  டிடிவி தினகரன் மீதான வழக்குகள் தற்போது மீண்டும் வேகமெடுத்துள்ளன.

இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாகும் என தெரிகிறது. தீர்ப்பில் தினகரனுக்கு  ஏற்கனவே அளிக்கப்பட்ட இரண்டு ஆண்டு தண்டனை உறுதி செய்யப்பட்டால் டிடிவி தினகரன் தேர்தலில் போட்டியிடமுடியாது… சசியை தொடர்ந்து டிடிவியும் சிறை செல்ல நேரிடும்  என்பது குறிப்பிடத்தக்கது…..