இன்று வருகிறது தீர்ப்பு: சசிகலா குடும்பம் “திக் திக்”!


சென்னை:

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் அக்காள் மகன், டிடிவி தினகரன்.  இவரது வங்கி கணக்குகளில் 1995, 1996-ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டில் இருந்து பெரும் தொகை டெபாசிட் செய்யப்பட்டது.

இந்தத் தொகை முறைகேடான வழியில் வந்தது என 1996-ஆம் ஆண்டு தினகரன் மீது அன்னிய செலாவணி மோசடி குறறச்சாட்டு சுமத்தப்பட்டு விசாரணை நடந்தது.

விசாரணையின் முடிவில் தினகரனுக்கு ரூ25 கோடி அபராதம் விதித்தது அமலாக்கத் துறை.

இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அமலாக்கத்துறையிடம் தினகரன் மேல்முறையீடு செய்தார். ஆனால் மத்திய அமலாக்கத்துறை உயர் அதிகாரிகள் தினகரனுக்கு ரூ.25 கோடி அபராதத் தொகை விதித்தது சரியே என உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தார்.

இதை தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி மகாதேவன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.

இந்த நிலையில் தினகரனின் அப்பீல் மனு மீது தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தீர்ப்பு அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.