நாகர்கோவில்:

தான் வாங்கிய மாவு புளித்து போயிருந்தது குறித்து மளிகை கடைக்காரரிடம்  கேட்டதில் ஏற்பட்ட தகராறில் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன்  மளிகைக்கடைக்காரரால் அடித்து உதைக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் பகுதியில் வசித்துவருகிறார் எழுத்தாளர் ஜெயமோகன் . இவர் தனது வீட்டு தேவைக்கா  நேற்று மாலை அருகில் உள்ள மளிகை கடையில் அரைத்த அரிசி மாவு பாக்கெட் வாங்கி உள்ளார். அதைக்கொண்டு இரவு தொசை சுட முயன்றபோது, மாவு கெட்டுப்போய் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அதை திருப்பி எடுத்துக்கொண்டு கடையில் கொடுத்து மாற்றக்கோரியுள்ளார். அப்போது, கடைக்காரருக்கும், ஜெயமோகனுக்கம் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலாப்பாக மாறியது.

தாக்குதலைத் தொடர்ந்து எழுத்தாளர் ஜெயமோகன் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.

ஜெயமோகன் கொடுத்த புகாரின் பேரில் நேசமணிநகர் போலீஸார் கடைக்காரர் செல்வத்தைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் ஜெயமோகன் பதிவிட்டுள்ளார். அதில்,   “சேதி உண்மை. ஒரு சிறு விவகாரத்தால் நான் தாக்கப்பட்டேன். அருகில் உள்ள கடையில் இரு பாக்கெட் தோசை மாவு வாங்கினேன் . இரண்டு நாள் பழைய புளித்த மாவை கொடுத்துவிட்டார்கள். கடையில் இருந்தவர் உரிமையாளரின் மனைவி. பாக்கெட்டை திருப்பி எடுக்க மறுத்து என்னை வசைபாட ஆரம்பித்தார்.  நான் கோபமாக மாவு பாக்கெட்டுகளை நீயே வைத்துக்கொள் என வீசிவிட்டு திரும்பினேன். அருகே அவர் கணவர் நின்றிருந்தார். ஏற்கெனவே குடித்து தகராறு செய்தபடி நின்றிருக்கிறார் .

என்னைத் தாக்க ஆரம்பித்தார். தாடையில் அடித்தார். கீழே விழுந்தபோது உதைத்தார். என் கண்ணாடி உடைந்தது.. பலமுறை தாக்கி கெட்டவார்த்தை சொன்னார்.  பின்னர் வீடு வந்தேன். அதற்குள் வீட்டுக்கு வந்து என் மனைவியையும் மகளையும் வசைபாடினார். வீட்டுக்குள் நுழைய முயன்றார்.

அதன் பின்னரே காவல் நிலையம் சென்று புகார் கொடுத்திருக்கிறேன். காவல் நிலையம் சென்ற பின்னர்தான் ஒரு கேடியின் தொடர்புகள் புரிந்தது. வழக்கறிஞர்கள். அரசியல் தலைவர்கள் வந்து அவனுக்காக வாதாடினார்கள். ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருக்கிறேன். சிறு காயங்கள் உள்ளன” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.