கண்ணீரை வரவழைக்கும் கடைசி முகநூல் பதிவு

தோக்ரிபுரா, ஜம்மு காஷ்மீர்

லஸ்கர் ஈ தொய்பா தீவிரவாதிகளால் கொல்லப் பட்ட ஃபெரோஸ் அகமது தோர்  தனது கடைசி முகநூல் பதிவில், தனது இறுதிச்சடங்கைப் பற்றி எழுதியுள்ள வரிகள் பலரும் கண்ணீர் விடும்படி உள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அனந்த நாக் அருகில் லஸ்கர் ஈ தொய்பா தீவிரவாதிகள் போலீசார் மீது கடும் தாக்குதல் நடத்தி இன்ஸ்பெக்டர் ஃபெரோஸ் அகமது தோர் மற்றும் ஐந்து போலிஸ்காரர்களை துடிக்க துடிக்க கொன்றனர்.   அவர்களின் முகத்தையும் தாறுமாறாக சிதைத்தனர்.

மறைந்த ஃபெரோஸின் உடல் இறுதிச் சடங்குக்காக எடுத்துச் செல்லப்பட்ட போது அவருடைய கடைசி முகநூல் பதிவில் தனது இறுதிச்சடங்கு நடைபெற்றால் தான் கல்லறையில் எப்படி உணர்வோம் என்பதை எழுதி இருந்ததை நினைவு கூர்ந்து அனைவரும் கண்ணீர் சிந்தினர்.

அவர் பதிவின் தமிழாக்கம் இதோ:

கற்பனை செய்க, ஒரு நாள் நாம் கல்லறையின் உள்ளே, கும்மிருட்டில் தன்னந்தனியே…..

நம்மை யாரும் வந்து நமது கல்லறையுள் நமக்கு இரவெல்லாம் நடந்த அனுபவத்தை கேட்பாரோ….

நமது உடல் குளிப்பாட்டி, புதைக்க எடுத்துச் செல்லும் நேரத்தை நினைத்துக் கொள்க.

நமது உறவினர்களின் துக்க உணர்வை யாரும் புரிந்துக் கொள்வார்களோ….

நமது உடல் கல்லறையினுள் செலுத்தப்படும் நேரத்தை யாரும் கற்பனை செய்ததுண்டோ…

மறைந்த ஃபெரோஸின் வயதான பெற்றோரும் இளம் மனைவி முபீனாவும் இந்த பதிவைக் கண்டு மார்பிலும் தலையிலும் அடித்துக் கொண்டு கதறியது கல்லையும் கரைக்கும் வண்ணம் இருந்தது.   அவரின் இரு மகள்களான அத்தா (வயது 6), சிம்ரன் (வயது 2) ஆகியோர் ஏதும் அறியாமல் விழித்தபடி நின்றனர்.

காலம் எதையும் மாற்றலாம்,  ஆனால் இழப்பை யாராலும் ஈடு செய்ய இயலாது