கோஹா, குஜராத்

குஜராத் மாநிலத்தில் மோடி பயணம் செய்த ரோரோ படகு நிறுவனத்தின் இரு படகுகள் நஷ்டம் காரணமாக விற்கப்பட உள்ளன.

குஜராத் மாநிலத்தில் உள்ள ரோரோ படகு நிறுவனம் கடந்த 2017 ஆம் வருடம் தொடங்கப்பட்டது.  இந்நிறுவனத்தின் முதல் கட்ட படகு போக்குவரத்து சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி நிறுவனத்தின் ஐலண்ட் ஜேட் என்னும் படகில் பயணம் செய்தார்.   இந்த படகுச் சேவை தெற்கு ஆசியாவின் முதல் உலகத் தரம் வாய்ந்த சேவை எனப் போற்றப்பட்டது.

இந்த சேவை காம்பட் வளைகுடாவில் உள்ள கோஹா மற்றும் தஹேஜ் நகரங்களுக்கு  இடையில் தொடங்கப்பட்டது.  இந்த இரு நகரங்களுக்கு இடையிலான தரை வழி தூரம் 360 கிமீ ஆகும்  என்பதால் பயண நேரம் 8 மணியாக இருந்தது.   ஆனால் கடல் வழியில் இந்த தூரம் 31 கிமீ என்பதால் அது ஒரு மணி நேரமாக் குறைந்தது.

இந்நிறுவனத்தில் ஐலண்ட் ஜேட் மற்றும் வாயேஜ் சிம்பனி ஆகிய இரு படகுகள் உள்ளன.  கோகா மற்றும் தகேஜ் இடையிலான பகுதியில் நர்மதை ஆற்றில் இருந்து வெளியாகும் வண்டல் மண் ஏராளமாகச் சேருவதால்  இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் குஜராத் கடல் போக்குவரத்துத் துறை இந்த பகுதியில் படகுச் சேவைகளை நிறுத்தியது.

கடந்த ஒரு வருடமாகவே ரோ ரோ நிறுவனம் கடும் நஷ்டத்தில் இயங்கி வருகையில் தற்போது படகுச் சேவை முழுவதுமாக நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.   எனவே இந்த நிறுவனம் தன்னிடம் உள்ள இரு படகுகளையும் விற்க உள்ளதாக அறிவித்துள்ளது.  அதானி போன்ற பெரு முதலாளிகளின் துறைமுக திட்டங்களுக்கு ஊக்கம் அளிக்கும் பாஜக அரசு சிறு படகு போக்குவரத்து நிறுவனத்தை கவனத்தில் கொள்ளவில்லை என சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.