Velumani Thuyavan  அவர்களின் முகநூல் பதிவு:
நம் காலத்தில் புவிக்கோளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மகத்தான புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோவின் 90வது பிறந்தநாள் இன்று (13.08.2016). மனிதகுலத்தின் வாழ்வுக்காக அவர் ஆற்றிய மகத்தான உரை:
“நெருக்கடியான காலகட்டங்களின்போது எந்தவொரு பகுதி மக்களையும் அணிதிரட்டுவதும் அவர்களுக்குத் தலைமையேற்பதும் – வழக்கமான மனித சக்தியை விட கூடுதலான சக்தியைச் செலுத்த வேண்டிய தேவை உள்ள – மிகக் கடுமையான காரியமே ஆகும். ஆனால் அப்படி மக்களை அணிதிரட்டாமல் மாற்றங்கள் சாத்தியமில்லை.
நான் ஏன் ஒரு சோசலிஸ்ட்டாக ஆனேன், இன்னும் பளிச்சென்று கேட்பதானால், நான் ஏன் கம்யூனிஸ்ட்டாக ஆனேன்?
ஏழைகளைச் சுரண்டுவதை தங்களது உரிமையாக எடுத்துக் கொண்டவர்களால்; உழைப்பு, திறமை மற்றும் ஒட்டுமொத்த மனித சக்தியால் உருவாக்கப்படும் அனைத்து பொருட்செல்வத்தையும் முற்றாக அபகரித்துக் கொள்வது தங்களது உரிமையாக எடுத்துக் கொண்டவர்களால் வரலாறு நெடுகிலும் கம்யூனிஸ்ட் என்ற வார்த்தை மிகவும் கீழ்த்தரமானதாக சித்தரிக்கப்பட்டு வந்துள்ளது; இழிவுபடுத்தப்பட்டு வந்துள்ளது; கம்யூனிச சித்தாந்தம் என்பது சிறுமைப்படுத்தப்பட்டு வந்துள்ளது.வரலாறு நெடுகிலும் மனிதர்கள், இந்த இரண்டில் எதைத் தேர்வு செய்வது என்ற மனநிலையிலேயே இருந்து வந்திருக்கிறார்கள்.

b
நாம் அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் நான் எளிமையாகச் சொல்கிறேன். நான் ஏதும் அறியாதவனும் அல்ல, எல்லாம் தெரிந்தவனும் அல்ல; நான் 20 வயது இளைஞனாக இருந்தபோது விளையாட்டிலும், மலையேறுவதிலும் ஆர்வத்துடன் இருந்தேன். அந்த சமயத்தில் மார்க்சியம் – லெனினியம் குறித்து கற்பிக்க – படிக்க உதவி செய்வதற்கு எந்த ஆசிரியரும் இல்லை; அந்த சமயத்தில் நான் மார்க்சிய, லெனினியக் கோட்பாடுகளைப் பற்றி லேசாக அறிந்திருந்ததைத் தவிர அதற்கு மேல் எதுவும் தெரிந்திருக்கவில்லை. சோவியத் ஒன்றியத்தின் மீது முழுமையான நம்பிக்கை மட்டுமே உற்சாகமூட்டியது. மாமேதை லெனினின் பணிகள், சோவியத் புரட்சியின் 70 ஆண்டுகள் கழித்து மீறப்பட்டன. அது எப்படிப்பட்ட வரலாற்றுப் படிப்பினையை நமக்குத் தந்துள்ளது. மகத்தான ரஷ்யப்புரட்சியைப் போன்று இன்னொரு புரட்சி நடப்பதற்கு 70 ஆண்டுகாலம் காத்திருக்கத் தேவைப்படாது என்று கருதுகிறேன்.

காலனி ஆதிக்கத்திற்கு எதிராகவும், அத்துடன் பிரிக்க முடியாத ஜோடியான ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் நடைபெற்ற மிகப்பிரம்மாண்டமான போராட்டத்தின் விளைவாக எழுந்த அந்த மகத்தான சோவியத் புரட்சியைப் போன்றதொரு பிரம்மாண்டமான சமூகப் புரட்சியை இந்த மனித குலம் அவசியம் பார்க்க வேண்டியுள்ளது.
எனினும், இன்றைக்கு பூமியின் தலைக்கு மேலே மிகமிகப்பெரிய ஆபத்து தொங்கிக் கொண்டிருக்கிறது; அந்த ஆபத்து நவீன ஆயுதங்களின் பேரழிவு சக்தியிடமிருந்து வந்துகொண்டிருக்கிறது; அந்த ஆயுதங்கள் இந்த புவிக்கோளத்தின் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கக் காத்திருக்கின்றன; புவியின் மீது மனிதகுலம் வாழ்வதை சாத்தியமற்றதாக மாற்றிடக் காத்திருக்கின்றன.
புரட்சிக்குப் பிறகு  சகாக்களுடன்..
புரட்சிக்குப் பிறகு சகாக்களுடன்..
டைனோசர்கள் மறைந்ததைப் போல இன்றைய உயிரினங்களும் மறைந்துபோகும் ஆபத்து காத்திருக்கிறது. ஒன்று, மிக அறிவார்ந்த வாழ்க்கையின் புதிய வடிவங்கள் எதிர்காலத்தில் உருவாகலாம்; அல்லது சூரியனின் வெப்பம், மெல்ல மெல்ல அதிகரித்து, சூரியக் குடும்பத்தில் உள்ள அனைத்துக் கோள்களையும் துணைக்கோள்களையும் அது உருக்கி அழித்துவிடலாம்;
இதை பெருவாரியான விஞ்ஞானிகள் ஒப்புக் கொள்கிறார்கள்.அவர்களது கோட்பாடுகளில் சில உண்மையாக இருக்குமானால் – நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு அதனுடைய வீச்சு புரியாமல் கூட இருக்கலாம் – அதை உணர்ந்து, இன்னும் கற்றுக்கொண்டு எதார்த்தத்திற்கு நம்மை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.
புவிக்கோளத்தின் உயிரினங்கள், காலவெளியில் இன்னும் நீண்ட காலத்திற்கு உயிர்வாழுமானால், எதிர்காலச் சந்ததியினர், நாம் அறிந்துகொண்டு பங்காற்றியதைவிட இன்னும் அதிகமாக அறிந்துகொண்டு செயலாற்றுவார்கள்.ஆனால், அவர்கள் முதலில் மிகப்பெரிய பிரச்சனை ஒன்றைத் தீர்த்தாக வேண்டும்.
மனிதகுலத்தின் கோடிக்கணக்கான உயிர்களுக்கு தேவைப்படுவதைவிட உண்மையில் மிக மிகக் குறைவான குடிநீரும் இயற்கை வளங்களுமே உள்ள நிலையில் தவிர்க்க முடியாத வகையில் துன்ப துயரங்களுக்குள் சிக்கியிருக்கும் மக்களுக்கு – எப்படி உணவளிப்பது என்பதைப் பற்றி அவர்கள் யோசித்தாக வேண்டும். நீங்கள் ஆச்சரியப்படலாம், எனது இந்தப் பேச்சில் அரசியல் எங்கே போனது என்று யோசிக்கலாம். என்னை நம்புங்கள், நான் இதையெல்லாம் சொல்வதற்கு வருத்தப்படுகிறேன்; ஆனால் இன்றைக்கு அரசியல் என்பது நான் கூறிய இந்த வார்த்தைகளில்தான் அடங்கியிருக்கிறது.மனிதர்கள் மேலும் மேலும் இந்த உண்மைகளைப் பற்றி கவலைப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்;
இன்னும் ஆதாம் – ஏவாள் காலத்திய மூடநம்பிக்கைகளில் ஆழ்ந்து கிடக்கக்கூடாது.எந்தவிதமான தொழில்நுட்பமும் சென்றடையாத, பசியோடு காத்திருக்கும் கோடிக்கணக்கான ஆப்பிரிக்க மக்களுக்கு யார் உணவளிப்பது? மழை இல்லை, அணைகள் இல்லை, நிலத்தடி நீர் இல்லை; முற்றிலும் மணலால் மூடப்பட்ட அந்தப் பிரதேசத்தின் மக்களுக்கு யார் உணவு தருவது?கிட்டத்தட்ட எல்லா அரசாங்கங்களும் பருவநிலை மாற்றம் தொடர்பான உடன்பாட்டில் கையெழுத்திட்டு தங்களது உறுதிப்பாடுகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்; அதற்கு பிறகும்கூட அவர்கள் மாற்றிப் பேசுவதைப் பார்க்கிறோம்.

a

இந்தப் பிரச்சனைகள் அனைத்திலும் நாம் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி, அடித்து நொறுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது; இந்த அடிப்படை அம்சங்களின் மீது இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை எனக் கருதுகிறேன்.
விரைவில் எனக்கு 90 வயது ஆகப்போகிறது. 90 வயது குறித்து எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த ஒரு கருத்தும் இல்லை. அதில் பெரிதாக மகிழ்ச்சியடைவதற்கும் ஒன்றும் இல்லை. நானும் விரைவில் எல்லோரையும் போலவே மரிக்கப்போகிறேன். நாம் எல்லோருமே அந்த நிலையை எட்டுவோம்.
ஆனால் கியூபக் கம்யூனிஸ்ட்டுகளின் சிந்தனைகள் என்றென்றும் ஒரு புவிக்கோளத்தின் அழியாத சின்னமாக மிளிரும்; மனிதகுலத்தின் மாண்புகளைக் காப்பதற்காக அந்தச் சிந்தனைகள் செயலாற்றிக் கொண்டே இருக்கும்; மனித குலத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதத்தில் பொருட்களையும், கலாச்சாரச் செல்வங்களையும் அது உற்பத்தி செய்துகொண்டே இருக்கும்; அந்த மகத்தான பொன்னுலகத்தைப் பெறுவதற்காக நாம் ஓய்வின்றி போராடுவது அவசியம்.
லத்தீன் அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள எனது சகோதரர்களே, கியூப மக்கள் சார்பில் சொல்கிறேன்; கியூப மக்களும், கியூப மக்களின் சிந்தனைகளும் மகத்தான வெற்றி பெறுவது உறுதி.இத்தகையதொரு மாநாட்டு அரங்கில் நான் உரையாற்றுவது இதுவே கடைசியாக இருக்கலாம்.
நாம் ஏற்றுக்கொண்ட சித்தாந்தத்தின் மீது அதிகபட்ச விசுவாசத்துடனும் மிக உயர்ந்த ஒன்றுபட்ட சக்தியுடனும் முன்னேறுவோம்; நம்முடைய இந்தப் பயணம் எவராலும் தடுக்க முடியாதது!”