டாக்கா: கொரோனா தொற்றுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில், 3 வாரங்களில் பெரிய கள மருத்துவமனையை அமைத்துள்ளது வங்கதேச அரசு.
அந்நாட்டில் இதுவரை மொத்தம் 18000 பேர் கொரோனா தொற்றியவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொரோனா காரணமாக இதுவரை 269 பேர் பலியாகியுள்ளனர். ஆனால், பாதிக்கப்பட்டோராக காட்டப்படும் எண்ணிக்கை குறைவு என்றும், போதுமான அளவில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.
தற்போது வங்கதேசத்தில் உள்ள குறைந்தளவு மருத்துவமனைகளே கொரேனா சிகிச்சையை அளித்துவரும் நிலையில், தற்போது 2084 படுக்கைகள் கொண்டதாக தயாராகிவரும் தயாராகிவரும் இந்தப் புதிய மருத்துவமனை, நெருக்கடியை பெருமளவில் சமாளிக்க உதவும் என்று கூறப்படுகிறது.
இந்த மருத்துவமனை தலைநகர் டாக்காவில் அமைகிறது. “சரியான மனித வளத்தைத் திரட்ட முடிந்தால், சிறந்த சேவையை வழங்க முடியும்” என்கிறார் மருத்துவமனையின் இயக்குநர் எசானுல் ஹக். இந்த மருத்துவமனை இயங்கத் தொடங்குவதற்கு முன்பாக 4000 மருத்துவப் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.