சிறையில் இருந்த மகனை மட்டும் விடுதலை செய்ய பாகிஸ்தான் முன்வந்ததை நிராகரித்த இந்திய ராணுவ தளபதி கேஎம்.கரியப்பா

பெங்களூரு:

இந்தியா-பாகிஸ்தான் போரின்போது, அப்போதைய இந்திய முப்படைத் தளபதி கேஎம்.கரியப்பாவின் மகன் கேசி.கரியப்பாவை விடுவிக்க பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் ஜெனரல் அயூப்கான் விரும்பினார்.

அதை ஏற்க தந்தை கரியப்பா மறுத்துவிட்டார். போர் கைதிகளாக பாகிஸ்தானில் இருப்பவர்கள் எல்லோருமே என் குழந்தைகள் என்று கூறி அயூப்கானின் விருப்பத்தை நிராகரித்தார்.


தந்தை ராணுவ தளபதி கேஎம் கரியப்பாவின் படம் அருகே, மகன் ஏர்மார்ஷல் கேசி கரியப்பா.

கடந்த 1965-ம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரின் கடைசிநாள். இந்திய விமானப் பிரிவில் பணியாற்றிய கேஎம்.கரியப்பாவின் மகன் 36 வயதான கேசி கரியப்பா எல்லையோரத்தில் பறந்து கொண்டிருந்தபோது சுடப்பட்டார்.

கீழே விழுந்த போர் விமானத்தின் இடிபாடுகளுக்கிடையே சிக்கிய அவரை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்தது.

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய மற்ற அதிகாரிகளைப் போலவே, இவரும் தன் பெயர்,பதவி போன்ற விவரங்களை கொடுத்தார். இந்த தகவல் ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகத்துக்கு தெரிவிக்கப்பட்டது.

ஒரு மணிநேரம் கழித்து, அவரைப் பிடித்தவர்கள் கேசி.கரியப்பா வைக்கப்பட்டிருந்த சிறிய சிறை அறைக்குள் வந்தனர். சுதந்திரத்துக்குப் பின் இந்திய ஆயுதப் படைகளின் முதல் தளபதியான கேஎம்.கரியப்பாவின் மகன்தான் என்பதை உறுதி செய்தனர். (கேஎம்.கரியப்பா முதலில் முப்படைக்கும் தளபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார்.)

உறுதி செய்துவிட்டு பாகிஸ்தான் வீரர்கள் சென்றபின், தான் கைது செய்யப்பட்டு பாகிஸ்தானில் இருப்பது குடும்பத்தாருக்கு தெரியாதே என்று வருந்தினார்.

அதேசமயம், பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் அயூப் கான் வானொலியில் பேசியபோது, இந்திய ராணுவ தளபதி கேஎம்.கரியப்பாவின் மகன் கேசி.கரியப்பா தங்கள் கட்டுப்பாட்டில் பத்திரமாக இருப்பதாகவும், 1947- ஆண்டு பிரிவினைக்கு முன்பு முப்படைத் தளபதியாக இருந்த கேஎம்.கரியப்பா தனது உயரதிகாரியாக இருந்ததாகவும் குறிப்பிட்டார். அவரது மகன் கேசி. கரியப்பாவை விடுதலை செய்ய தயாராக இருப்பதாகவும், கேஎம்.கரியப்பா மீது உயர்ந்த மதிப்பு வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

எனவே, இந்திய ராணுவ தளபதி கேஎம்.கரியப்பாவை நேரில் சந்தித்து அவர் மகன் நலமுடன் இருப்பதை சொல்லுமாறு, புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதருக்கு உத்தரவிட்டுள்ளதாககவும்,பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் அயூப் கான் கூறினார்.

ஆனால், தன் மகன் கேசி.கரியப்பா மட்டும் விடுதலை செய்யப்படுவதை ராணுவ தளபதி கேஎம்.கரியப்பா விரும்பவில்லை. பாகிஸ்தானால் கைது செய்யப்பட்ட அனைவருமே என் குழந்தைகள். அவர்களை பாகிஸ்தான் நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும் என்றார்.

தற்போது ராணுவ தளபதி கேஎம்.கரியப்பாவின் மகன் கேசி. கரியப்பாவுக்கு 80 வயதாகிறது.

இந்த மலரும் நினைவு குறித்து ஏர் மார்ஷல் கேசி கரியப்பா கூறும்போது, “உயர்ந்த கொள்கையோடு வாழ்ந்தவர் என் தந்தை கேஎம்.கரியப்பா. அவருக்கு நானும் மற்ற வீரர்களும் சமமே. அயூப்கான் என் தந்தையின் ஜுனியர். என் தந்தைக்கு நெருக்கமானவர். இருந்தாலும், என்னை மட்டும் விடுவிக்க என் தந்தை மறுத்துவிட்டார்.
எல்லோரும் விடுதலையான பின்னர் தான், கடைசி ஆளாக நான் விடுதலை செய்யப்பட்டேன்.

நான் பிடிபட்ட அன்று, போர் முடிந்த விவரம் எனக்குத் தெரியாது. மீண்டும் இந்திய விமானப் படையில் ஹெலிகாப்டர் கமாண்டராக இருந்து, ஏர்மார்ஷலாக ஓய்வு பெற்றேன். பாகிஸ்தானுடன் நடந்த 1971-ம் ஆண்டு போரிலும் நான் பங்கேற்றிருக்கின்றேன்.
நிறைய புத்தகங்கள் எழுதியிருக்கின்றேன். தற்போது கர்நாடக மாநிலம் குடகுவில் என் தந்தை ராணுவ தளபதி கேஎம்.கரியப்பா வாழ்ந்த இல்லத்தில் வாழ்ந்து வருகின்றேன்” என்றார்.