ஃபிஃபா 2018: குரோஷியா வீரருக்கும், அதிபருக்கும் கார்ட்டூன் வெளியிட்டு கவுரவப்படுத்திய ‘அமுல்’

டில்லி:

ரஷ்யாவில் நடந்த உலககோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது. பிரான்ஸ் அணி மட்டுமின்றி இறுதி போட்டியில் விளையாடிய குரோஷியா அணியும் உலகளவிலான கால்பந்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டது.

குரோஷியா அணியினர் நாடு திரும்பியபோது அந்நாட்டு மக்கள் தேசிய நிறமான சிகப்பு மற்றும் வெள்ளை நிற ஆடைகளை அணிந்து, குரோஷியா தேசிய கொடியை ஏந்தி தலைநகர் ஜாக்ரேப்பில் வீரர்களை வாழ்த்தி வரவேற்றனர். இதனால் அந்நகர தெருக்கள் அனைத்தும் விழாக் கோலம் பூண்டது.

குரோஷியாவில் மட்டுமின்றி இந்தியாவிலும் அந்த அணி வீரர்களுக்கு கவுரம் செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் பால் சார்ந்த உணவு பொருட்களை தயாரிக்கும் நிறுவனமான ‘அமுல்’ ஃபிஃபா 2018ல் தங்க கால்பந்து வென்ற குரோஷியா வீரர் லுகா மாடிரிக்கிற்கு அழகிய கார்ட்டூன் வரைந்து பெருமைபடுத்தியுள்ளது.

அந்த கார்ட்டூனில் தங்க கால்பந்து கோப்பையுடன் லுகா மாடிரிக்கிற்கு அந்நாட்டு அதிபர் கோலிண்டா க்ராபர் ‘சாண்ட் விச்’ வழங்குவது போன்று வெளியிடப்பட்டுள்ள கார்ட்டூன் சமூக வலை தளங்களில் வைரலாகியுள்ளது.

ஏற்கனவே, குரோஷியா அணியின் முதல் போட்டியை காண அதிபர் கோலிண்டா க்ராபர் விமானத்தில் எக்னாமிக் வகுப்பில் பயணம் செய்து வீரர்களை ஊக்குவித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

அமுல் நிறுவனம் வெளியிட்டுள்ள மற்றொரு கார்ட்டூனில், ஃபிஃபா 2018ல் இளம் வீரர் விருது பெற்ற பிரான்ஸ் அணி வீரர் கிலியன் ம்பாபே கவுரவப்படுத்தப்பட்டுள்ளார்.