பிஃபா 2018: இங்கிலாந்தை வீழ்த்தி முதல் முறையாக இறுதி சுற்றுக்கு முன்னேறிய குரோஷியா

உலக கோப்பை கால்பந்து போட்டியில் 2-1 என்ற கோல்கள் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி குரோஷியா முதன் முறையாக இறுதி சுற்றுக்கு நுழைந்தது. மாஸ்கோ நகரில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி சுற்றில் உலக தரவரிசையில் 12வது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணியும், 20வது இடத்தில் உள்ள குரோஷியா அணியும் மோதின.

croatia

போட்டி தொடங்கிய 5வது நிமிடத்தில் கிடைத்த ஃப்ரீகிக் வாய்ப்பை பயன்படுத்தி இங்கிலாந்து வீரர் டிரிப்பர் முதல் கோல் அடித்தார். இதனை தொடர்ந்து வீரர்கள் விருவிருப்பாக ஆடிக்கொண்டிருக்க 27வது நிமிடத்தில் மீண்டும் கிடைத்த பிரீகிக் வாய்ப்பில் இங்கிலாந்து வீரர் ஆஷ்லே அடித்த பந்தை குரோஷியா அணியின் கோல் கீப்பர் சுபாஷிஸ் லாவகமாக தடுத்து நிறுத்தினார். இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி கேன் கோலடிக்க முயன்று உதைத்த பந்தை குரோஷியாவின் சுபாஷிஸ் தடுத்து நிறுத்தினார். முதல் பாதி ஆட்டத்தில் இங்கிலாந்து 1-0 என்ற கோல் அடித்து முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கப்பட்ட நிலையில் குரோஷியா அணியின் வீரர்கள் சுதாரித்துகொண்டு ஆடத்தொடங்கினர். 68வது நிமிடத்தில் பெரிசிஸ் தனது அணிக்காக ஒரு கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என்ற புள்ளிகளில் சமநிலைப்படுத்தினார். அடுத்து 70 மற்றும் 82வது நிமிடத்தில் குரோஷியா வீரர்கள் அடித்த பந்துக்களை இங்கிலாந்து கோல் கீர்ப்பர் ஜோர்டன் தடுத்து நிறுத்தினார். போட்டி முடியும் தருவாயில் மீண்டும் இங்கிலாந்து அணிக்கு கிடைத்த ப்ரீகிக் வாய்பில் டிரிப்பர் அடித்த பந்து கோல் அடிக்காமல் செல்லவே இரண்டாவது சுற்றின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் எடுத்தன.

இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் கூடுதலாக 15 நிமிடங்கள் அளிக்கப்பட்டன. இதில் இங்கிலாந்து அணிகள் கோலடிக்க முயன்றும் முடியாமல் போனது. 109வது நிமிடத்தில் குரோஷியாவின் இவான் பெரிசிச் தலையால் முட்டி பாஸ் செய்த பந்தை மரியோ மாண்ட்ஜூகிக் கோலாக மாற்றினார். இதன் முடிவில் குரோஷியா அணி 1-2 என்ற கோல்கள் கணக்கில் இங்கிலாந்து வீரர்களை வீழ்த்தி வென்றது.

உலக கோப்பை வரலாற்றில் குரோஷியா அணி முதல்முறையாக இறுதி போட்டிக்கு நுழைந்துள்ளது. இதற்கு முன்பு 1998ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் குரோஷியா அரையிறுதி முன்னேறிய நிலையில் பிரான்ஸ் அணியிடம் தோற்றது.

ஜூலை 15ம் தேதி மாஸ்கோவில் நடக்கவுள்ள இறுதி போட்டியில் பிரான்ஸ் அணியை எதிர்கொள்ள குரோஷியா அணி காத்திருக்கிறது.

இந்த போட்டியில் தோல்வியடைந்த இங்கிலாந்து அணி 14ம் தேதி நடக்க உள்ள 3வது இடத்துக்கான போட்டியில் ஏற்கெனவே அரையிறுதியில் தோல்வியடைந்த பெல்ஜியத்தை எதிர்கொள்கிறது.