Random image

ஃபிஃபா 2018: உருகுவே அணியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ்

மாஸ்கோ:

உலக கோப்பை கால்பந்து போட்டியில் முதலாவது கால் இறுதி போட்டியில் உருகுவே அணியை வீழ்த்தி பிரான்ஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

உலக கோப்பை கால்பந்து போட்டிகள் ஃபிஃபா 2018 ரஷ்யாவில் நடந்து வருகிறது இன்று நடந்த ஒரு கால் இறுதி போட்டியில் முன்னாள் சாம்பியன்கள் பிரான்சும், உருகுவேயும் மோதின. ஆட்டம் மந்தமாக நடந்து வந்த நிலையில் 40வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் வரானே ஒரு கோல் அடித்தார்.

இதன் மூலம் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல கணக்கில் முன்னிலை பெற்றது. உருகுவே அணி கோல் அடிக்காததால் முதல் பாதியில் பிரான்ஸ் அணியே 1-0 என முன்னிலையில் இருந்தது.

2-வது பாதியில் பிரான்ஸ் அணியின் ஆதிக்கமே தொடர்ந்து நீடித்தது. 61-வது நிமிடத்தில் கிரிஸ்மான் பந்தை புயல் வேகத்தில் உதைத்தார். அதை உருகுவே கோல்கீப்பர் தடுக்க முயன்றார். ஆனால் பந்து கோல்கீப்பர் கையில் பட்டு கோலாக மாறியது. இதன் மூலம் பிரான்ஸ் 2-0 என்ற கோல் கணக்கில் மேலும் முன்னேறியது.

உருகுவே அணி கோல் அடிப்பதற்காக கடுமையான முயற்சி மேற்கொண்டது. பிரான்ஸ் கோல் எல்லைக்கு பந்தை கொண்டு சென்றும் அதை கோலாக மாற்ற முடியாமல் உருகுவே அணியினர் ஏமாற்றமடைந்தனர்.

பிரான்ஸ் அணியினர் அதை லாவகமாக தடுத்துவிட்டனர். 90 நிமிடம் முடிந்து காயம் மற்றும் ஆட்டம் தடையை கணக்கிட்டு கூடுதலா 5 நிமிடங்கள் கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த வாய்ப்பிலும் உருகுவே அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் பிரான்ஸ் 2-0 என உருகுவேயை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

2006ம் ஆண்டுக்கு பின்னர் பிரான்ஸ் அணி முதல் முறையாக அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதற்கு உருகுவே கோல் கீப்பர் ஃபெர்ணாண்டோ மஸ்லேரா மிகப் பெரிய உதவி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உருகுவேவுக்கு எதிராக இதுவரை விளையாடிய 9 போட்டிகளிலும் பிரான்ஸ் வென்றுள்ளது. அதே நேரத்தில் உலகக் கோப்பையில் 6 முறை கால் இறுதி போட்டிக்குள் உருகுவே நுழைந்து, அதில் 5 முறை அரை இறுதிக்கு தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 2 முன்னாள் சாம்பியன்கள் மோதியதால் இப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.

You may have missed