Random image

உலகக்கோப்பை கால்பந்து: இறுதிப்போட்டி… திக் திக் நிமிடங்கள்!

நெட்டிசன்:

சரவணன் சவடமுத்து அவர்களின் முகநூல் பதிவு:

கால்பந்திற்கான 2018 உலகக் கோப்பையை பிரான்ஸ் அணி வென்றது. இன்று மாஸ்கோவில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் குரோஷியா அணியை 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வென்று கோப்பையைத் தட்டிச் சென்றது.

பரபரப்பாக இருந்த இன்றைய மாலைப் பொழுதில் உலகம் முழுவதும் இருக்கும் கால்பந்து ரசிகர்களின் பார்வை குரோஷிய அணி மீதுதான் படர்ந்திருந்தது.

நிச்சயம் அந்த அணிதான் வெற்றி பெறும் என்று உலக கால்பந்து ஆர்வலர்களும், குரோஷிய அணி மீதிருந்க கரிசனம் காரணமாக கோடிக்கணக்கான ரசிகர்களும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால் நடந்ததோ வேறு.

ஆட்டம் துவங்கிய முதல் நிமிடத்திலேயே தங்களது ஸ்பெஷாலாட்டியான கட்டைக் கால் கொடுப்பதைத் துவக்கி வைத்தது குரோஷிய அணி.

அதிலும் அந்த அணி கேப்டனான Modric-தான் இந்த வேலையைத் துவக்கி வைத்தார். பிரான்ஸ் அணி வீரர் சாமுவேல் உம்டிடியை கீழே தள்ளி பவுலாக்கினார்.

இதற்கடுத்து பந்துகளை தங்களுக்குள்ளேயே பரிமாறிக் கொண்டாலும் கோல் போஸ்ட்டை நோக்கி போகும் அளவுக்கு மும்முரமாகாமல், இரு தரப்பினருமே சுதாரிப்பாக விளையாடிக் கொண்டிருந்தனர்.

10-வது நிமிடத்தில் குரோஷிய அணிக்கு ஒரு அழகான வாய்ப்புக் கிட்டியது. அந்த அணி வீரர் மாட்ரிக் அடித்த பந்தை வரவேற்று கோலுக்குள் அடிக்க வேண்டிய வீரரான giroud, மில்லி நொடிகள் தாமதமாக அந்த இடத்திற்கு வந்ததால் பந்து வீணாக வெளியேறியது.

 

17-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு ப்ரீ கிக் வாய்ப்புக் கிடைத்தது. குரோஷிய வீரர் Marcelo Brozovic, பிரான்ஸ் வீரர் Antoine Griezmann-ஐ கீழே தள்ளியதால் பவுலானது.

கிடைத்த இந்த ப்ரீ கிக்கை ஷாட்டாக மாற்றி உயரே தூக்கியடித்தார் பிரான்ஸ் வீரர் Antoine Griezmann. உயரே பறந்து வந்த பந்தை தலையில் திருப்பிவிடுவதாய் நினைத்து லேசாக டச் செய்தார் குரோஷிய வீரர் Mario Mandzukic.

ஆனால் அவரது துரதிருஷ்டம். பந்து நேராக வலைக்குள் போய் விழுந்து கோலானது. சேம் சைட் கோல். உலகக் கோப்பை போட்டியின் இறுதியாட்டத்திலேயே சேம் சைட் கோல். அசத்தல் துவக்கமானது.

20-வது நிமிடத்தில் குரோஷிய அணிக்குக் கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பில் குரோஷிய வீரர் மாட்ரிக் கோல் அடிக்க முயல.. அதனை பிரான்ஸ் வீரர் தன் தலையால் தட்டி வெளியேற்றினார்.

23-வது நிமிடத்திலும் குரோஷிய அணிக்கு ஒரு ப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. இந்த பந்து கிட்டத்தட்ட 3 நிமிடங்கள் மைதானத்திற்குள் பிரான்ஸ் கோல் பகுதியில் பறந்து கொண்டேயிருந்தது. கடைசியில் குரோஷிய வீரர்கள் முயற்சி பலனளிக்காமல் அவுட்டுக்கு சென்றது.

27-வது நிமிடத்தில் குரோஷிய வீரருக்கு கட்டைக் கால் கொடுத்து கவிழ்த்ததற்காக பிரான்ஸ் வீரர் Kaite-க்கு மஞ்சள் அட்டை கிடைத்தது.

28-வது நிமிடத்தில் குரோஷியாவுக்கு ஒரு ப்ரீ கிக் வாய்ப்பு. Ivan Perisic தூரத்தில் இருந்து அடித்ததில் பந்து ஒரு ஓரமாக வலைக்குள் போய் கோலாகியது.

33-வது நிமிடத்தில் கார்னர் ஷாட் பிரான்ஸ் அணிக்குக் கிடைத்தது. வந்த பந்தை குரோஷிய வீரர் தன் கையால் தட்டி வெளியேற்றியதை நடுவர் தற்செயலாக பார்த்துவிட்டு பவுல் என்றார். இது பற்றி மூன்றாவது நடுவரிடம் ஒப்பீனியன் கேட்க.. இதனை உறுதிப்படுத்த தானே டிவியில் ரீப்ளே செய்யச் சொல்லிப் பார்த்தார் நடுவர்.

அது கையால் தட்டப்பட்டு வெளியேற்றப்பட்டது என்பது உறுதியாக உடனடியாக “பெனால்டி” என்றார் நடுவர். இந்த பெனால்டியை பயன்படுத்தி பிரான்ஸ் வீரர் Antoine Griezmann மிக அழகாக கோல் அடித்தார்.

இந்தக் கோலைகூட கொஞ்சம் கூர்ந்து கவனித்து சற்று தாமதமாக ஆக்சன் எடுத்திருந்தால் குரோஷிய கோல் கீப்பரால் தடுத்திருக்க முடியும்.

பிரான்ஸ் வீரரின் கால் பந்தைத் தொடுவதற்குள்ளாக கோல் கீப்பர் வலது பக்கம் தரையில் விழுந்தேவிட்டார். பிரான்ஸ் வீரருக்கு இது ரொம்பவே வசதியாகிவிட்டது. மிக மெதுவாக பந்தை இடது பக்கம் தள்ளிவிட்டு கோலாக்கினார்.

இப்போது பிரான்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

40-வது நிமிடத்தில் குரோஷியாவுக்கு மிக அருமையானவாய்ப்புக் கிடைத்தது. ஆனால் குரோஷிய வீரரால் தன் இடது காலால் அதனை அத்தனை வலுவாக அடிக்க முடியாததால் பந்து மெதுவாக உருண்டு, புரண்டு பிரான்ஸ் கோல் கீப்பரின் கைகளுக்கு போய் சேர்ந்தது.

41-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் Lucas Hernandez மஞ்சள் அட்டையைப் பரிசாகப் பெற்றார்.

43-வது நிமிடத்தில் ப்ரீ கிக் வாய்ப்பில் குரோஷிய வீரர்கள் பிரான்ஸின் முன் கள வீரர்களை முறியடிக்க முடியாமல் தூரத்தில் இருந்து ஷாட் அடிக்க பந்து வலைக்கு மேலே பறந்து போனது.

45-வது நிமிடத்தில்கூட குரோஷியாவுக்கு கார்னர் ஷாட்டில் ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பந்து கடைசி நொடியில் திசை மாறியதால் வலைக்கு அருகில் வெளியே சென்றது.

இடைவேளையின்போது 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் முன்னிலையில் இருந்தது.

48-வது நிமிடத்தில் குரோஷிய வீரர் Antoine Griezmann தூரத்தில் இருந்து அடித்த ஷாட் நிச்சயம் கோலாகியிருக்க வேண்டும். ஆனால் பிரான்ஸ் கோல் கீப்பர் தனது கையை வைத்து தட்டிவிட்டதில் பந்து வலைக்கு மேலே சென்றுவிட்டது.

49-வது நிமிடத்தில் குரோஷிய வீரர் ஆண்டி ரெபக் தனி ஆளாக பந்தை உருட்டிக் கொண்டே ஓடி வர நிச்சயம் கோல் விழும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நேரத்தில் பிரான்ஸ் கோல் கீப்பர் முன்னாலே ஓடி வந்து பந்தை தன் நெஞ்சில் தாங்கி பிடித்துவிட்டார்.

50-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி வீரர் Mbappe தனி ஆளாக கிடைத்த பந்தை உருட்டிக் கொண்டு ஓடி வந்தார். ஒரேயொரு குரோஷிய வீரரே அவரை பின் தொடர்ந்து வந்த சமயம் குரோஷிய கோல் கீப்பர் மிக துல்லியமாக தனது காலால் அந்த பந்தை உதைத்து அத்திட்டத்தை முறியடித்தார்.

திடீரென்று இரண்டு பிரான்ஸ் ரசிகர்கள் கேலரியில் இருந்து மைதானத்திற்குள் ஓடோடி வர.. ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது. காவலர்கள் ஓடி வந்து ரசிகர்களை குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றினார்கள்.

58-வது நிமிடத்தில் குரோஷிய வீரர் Perisic மீண்டும் ஒரு ஷாட் அடித்துப் பார்த்தார். ஆனால் பிரான்ஸ் கோல் கீப்பர் அதனைக் கைகளால் பிடித்துவிட்டார்.

60-வது நிமிடத்தில் தங்களது கோல் போஸ்ட் பகுதியிலிருந்து பந்தை கடத்தி வந்த பிரான்ஸ் அணியினர் நான்காவது பாஸிங்காக பந்தை Pogbaவிடம் தள்ளிவிட.. அதை அவர் சற்று தூரத்தில் இருந்து ஷாட் அடித்து கோலாக்கினார். 3-1 என்ற கோல் கணக்கில் முன்னேறியது பிரான்ஸ்.

அடுத்த நிமிடமே மீண்டும் அதேபோல் ஒரு கோல் அடிக்கும் வாய்ப்பு பிரான்ஸ் அணிக்குக் கிடைத்தது. ஆனால் இந்த முறை பந்தை குரோஷிய வீரர்கள் அவுட்டிற்கு அடித்துத் தள்ளினார்கள்.

63-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் Mbappe தூரத்தில் இருந்து அழகான ஷாட் மூலமாக 4-வது கோலை போட்டார். இ்ப்போது 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றியை உறுதி செய்தது பிரான்ஸ்.

இதன் பின்பு குரோஷிய வீரர்களின் பெருமளவு தளர்ந்துவிட்டனர். 3 கோல்களை இனிமேல் அடிக்க முடியாது என்கிற எண்ணத்திற்கு வந்தவர்கள், முனைப்பில்லாமல் விளையாடினார்கள்.

68-வது நிமிடத்தில் தங்களது கோல் கீப்பர் வசம் பிரான்ஸ் வீரர்கள் பந்தை திருப்பிவிட்டனர். வந்த பந்தை தடவிக் கொண்டிருந்த பிரான்ஸ் கோல் கீப்பரின் அருகில் வந்த குரோஷிய வீரர் Mario Mandzukic பந்தை லேசாகத் தட்டிப் பறித்து அதனை கோலாக்கினார்.

உலகக் கோப்பை போட்டியின் இறுதியாட்டத்தில் இந்த மாதிரியான கோலானது இதுதான் முதல் முறையாம்..! இது முழுக்க, முழுக்க பிரான்ஸ் கோல் கீப்பரின் அலட்சியத்தால் ஏற்பட்டது.

69-வது நிமிடத்தில் இருந்து 75-வது நிமிடம்வரையிலும் பந்தை இரு தரப்பினரும் மாறி, மாறி பறித்துக் கொண்டேயிருந்தனர். பந்தை அதிக நேரம் குரோஷிய வீரர்களே தக்க வைத்துக் கொண்டிருந்தனர். இருந்தாலும் பிரான்ஸ் அணியின் கோல் போஸ்ட்டை அவர்களால் நெருங்க முடியவில்லை.

77-வது நிமிடத்தில் குரோஷிய வீரர்கள் அடித்த பந்து கோல் அடிக்க வாய்ப்புள்ளதாக இருந்தது. ஆனால் வந்த பந்தை திருப்பி கோலுக்குள் தள்ளிவிட அங்கே குரோஷிய வீரர்கள் யாருமில்லாததால் அது வீணானது.

82-வது நிமிடத்திலும் இதேபோல் கிடைத்த ஒரு வாய்ப்பில் குரோஷிய வீரர் அடித்த பந்து வலையின் மிக அருகில் வெளியில் பாய்ந்தது. அதிர்ஷ்டமில்லை.

84-வது நிமிடத்தில் குரோஷிய அணிக்கு கிடைத்த ப்ரீ கிக்கில் ஷாட்டாக பறந்து வந்த பந்தை பிரான்ஸ் கோல் கீப்பர் முன்னேறி வந்து கைகளிலேயே பிடித்துவிட்டார்.

87-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி வீரர் Rakitic அடித்த மிக அழகான ஷாட்டை குரோஷிய கோல் கீப்பர் அதிர்ஷ்டவசமாய் பிடித்துவிட்டார். இல்லையேல் இதுவும் கோலாகியிருக்கும்.

88-வது நிமிடத்தில் குரோஷியா கோல் அடிக்க முயற்சி செய்து அது பிரான்ஸ் கோல் கீப்பர் வசமானது.

89-வது நிமிடத்திலும் குரோஷிய வீரர்கள் குட் பாஸிங்கில் கொண்டு வந்த பந்தை பிரான்ஸ் கோல் கீப்பர் தடுத்துவிட்டார்.

கூடுதலாக 5 நிமிடங்கள் கிடைத்தன. இதிலும் 92-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி கோல் போட முயன்றது. பந்தை கோல் கீப்பர் பிடித்துவிட்டார்.

93-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் Virsalko மஞ்சள் அட்டையைப் பெற்றார். எப்படியும் ஜெயிக்கத்தான் போகிறார்கள். பின்பு எதற்காக கடைசி நிமிடத்தில் கட்டைக் கால் கொடுப்பது..? கெட்ட பயலுக..!

95-வது நிமிடத்தில் குரோஷியா கடைசி ஷாட்டையும் அடித்துப் பார்த்தது. அதுவும் வீணாக.. அதற்குள்ளாக மைதானம் முழுக்க பிரான்ஸ் ரசிகர்கள் கொண்டாடட்ட மூடுக்கு போய்விட.. குரோஷிய வீரர்கள் தளர்ந்துவிட்டனர்.

கடைசியாக விசில் ஊதப்பட… மைதானத்தின் வெளியில் இருந்த பிரான்ஸ் வீரர்களின் சந்தோஷ கூச்சலுடன் பிரான்ஸ் அணி தனது வெற்றியைக் கொண்டாட துவங்கியது.

இந்தப் போட்டியில் குரோஷிய அணியின் தோல்விக்குக் காரணம் அவர்களேதான். சேம் சைட் கோலை தவிர்த்திருக்க வேண்டும். அதேபோல் பெனால்டி வாய்ப்பையும் கொடுத்திருக்கக் கூடாது. இரண்டையும் செய்து தங்களுக்குத் தாங்களே சூனியம் வைத்துக் கொண்டார்கள்.

இந்தப் போட்டியைப் பார்ப்பதற்காக ரஷ்ய அதிபர் புடின், பிரான்ஸ் அதிபர் மெக்ரான், குரோஷிய பெண் அதிபர் Kolinda Grabar-Kitarović-வும் வந்திருந்தனர்.

போட்டியின் முடிவில் மெக்ரான், குரோஷிய அதிபரை கட்டியணைத்து ஆறுதல் தெரிவித்துக் கொண்டார்.

நேற்றைய தினமே குரோஷிய பெண் அதிபரை ஆட்ட நேரத்தில் காண்பிக்கக் கூடாது என்று கேமராமேன்களுக்கு உத்தரவு போடப்பட்டிருந்தால், அவருடைய சந்தோஷத்தையும், உற்சாகத்தையும் நம்மால் பார்க்க முடியாமல் போய்விட்டது.

ஆனாலும் என்ன… எல்லாவற்றுக்கும் சேர்த்து வைத்து விருது வழங்கும் விழாவில் அனைவரையும் கட்டியணைத்து ஆறுதல் சொல்லி தேற்றுதலை வாரி வழங்கி ஒட்டு மொத்த உலகத்தையும் கவர்ந்திழுத்துவிட்டார் குரோஷிய அதிபர்.

மைதானம் முழுவதும் ஓடி, ஓடி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தார்கள் பிரான்ஸ் அணி வீரர்கள். அவர்களது சந்தோஷம் ஒரு பக்கம் ஆறாக ஓடினாலும் இன்னொரு பக்கம் குரோஷிய வீரர்கள் சோகமே உருவாக நின்று கொண்டிருந்தனர்.

பிரான்ஸ் அணியின் பயிற்சியாளர் குரோஷிய பயிற்சியாளரையும், வீரர்களையும் தேடிப் போய் பார்த்து ஆறுதல் சொல்லி கட்டியணைத்துவிட்டு வந்தார்.

சரியாக விருது வழங்கும் நிகழ்ச்சி துவங்கிய கணத்தில் மழை கொட்டோ, கொட்டோவென்று கொட்டத் துவங்கியது.

இத்தனை மழையிலும் பொறுமையாக இருந்து இரு அணி வீரர்களையும், நடுவர்களையும் கட்டியணைத்து தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள் பிரான்ஸ் மற்றும் குரோஷிய நாட்டு அதிபர்கள்.

இந்த டோர்ணமெண்ட்டின் சிறந்த இளம் வீரர் என்கிற விருதை பிரான்ஸ் அணி வீரர் MBAPPE பெற்றார்.

தங்க பந்தினை குரோஷிய அணி கேப்டன் Madric பெற்றார்.

தொடர்ந்து நடுவர்கள் தங்களுக்கான மெடல்களை ரஷ்ய அதிபர் புடினிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.

அதற்கடுத்து தோல்வியடைந்த அணி வீரர்கள் அனைவரும் வரிசையாக வந்து மெடல்களை பெற்றுக் கொண்டனர்.

வெற்றி பெற்ற பிரான்ஸ் அணியின் வீரர்களுக்கு மெடல் கொடுத்த கையோடு அவர்களுக்கான தங்க விருதை பிபா அமைப்பின் தற்போதைய தலைவர் வழங்கினார்.

இந்த விருதினை கொடுப்பதற்கு முன்பாக பிரான்ஸ் அதிபர் மற்றும் குரோஷிய அதிபர் இருவரும் அந்த தங்க விருதை வலுக்கட்டாயமாக இழுத்து முத்தம் கொடுத்து அனுப்பி வைத்தனர்.

விருதினைப் பெற்றுக் கொண்ட பிரான்ஸ் அணியினரின் சந்தோஷம் அளவில்லாதது. அடுத்த 10 நிமிடங்களுக்கு அந்தத் தங்க கோப்பை பலரது கைகளுக்கும் இடம் மாறிக் கொண்டேயிருந்தது.

அந்த நேரத்தில் பாரீஸில் ஈபிள் டவரின் அருகே பிரம்மாண்டமான ஸ்கிரீனில் இதைப் பார்த்துக் கொண்டிருந்த லட்சக்கணக்கணக்கான மக்களின் கை தட்டல், ஐரோப்பா முழுவதும் கேட்டிருக்கும்..!

அடுத்த சில நாட்கள் பிரான்ஸ் நாட்டில் கால்பந்து கோலாகலம்தான்..!