உலகக் கோப்பை கால்பந்து 2018 : சுவிட்சர்லாந்து – கோஸ்டா ரிகா போட்டி டிரா
மாஸ்கோ
உலகக் கோப்பை கால்பந்து 2018 போட்டிகளில் நேற்று சுவிட்சர்லாந்துக்கும் கோஸ்டா ரிகா அணிகளுக்கும் இடையிலான போட்டி டிராவில் முடிவடைந்தது.
நேற்று உலகக் கோப்பை கால்பந்து 2018 போட்டிகளில் ஒரு போட்டியில் சுவிட்சர்லாந்து அணியும் கோஸ்டா ரிகா அணியும் மோதின. கோஸ்டா ரிகா அணி தனது வீரர்களை சிறிது மாற்றி அமைத்திருந்ததால் ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆட்ட ஆரம்பத்தில் 10 நிமிடங்களிலேயே கோஸ்டா ரிகா அணி இருமுறை கோல் அடிப்பதை தவற விட்டது.
ஆட்டம் ஆரம்பித்து 31 ஆம் நிமிடத்தில் சுவிட்சர்லாந்தில் பிலெரிம் சிமைலி அணியின் முதல் கோலை அடித்தார். ஆட்டத்தின் முதல் பாதியில் சுவிட்சர்லாந்து 1 கோலுடன் முன்னணியில் இருந்தது. இரண்டாம் பாதியில் கோல் அடிக்க கோஸ்டா ரிகா கடுமையாக முயன்றது. 56ஆம் நிமிடத்தில் அந்த முயற்சி வென்றது. கெண்டல் வெஸ்டன் தனது அணியின் முதல் கோலை அடித்தார்.
விறுவிறுப்பாக சென்ற ஆட்டத்தில் 88 ஆவது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணியின் ஜோசப் தனது அணியின் இரண்டாம் கோலை அடித்து அணியை முன்னணியில் கொண்டு வந்தார். கோஸ்டா ரிகா அணி பலவாறு முயன்றும் அடுத்த கோலை அடிக்க முடியவில்லை. ஆனால் போட்டியின் இறுதி நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் பிரியன் ரூயிஸ் ஒரு சேம் சைட் கோல் அடிக்கவே கோஸ்டா ரிகா தனது இரண்டாம் கோலை பெற்றது.
போட்டியில் இரு அணிகளும் 2-2 என்னும் அளவில் சமமாக இருப்பதால் போட்டி டிராவில் முடிந்தது.