உலகக் கோப்பை கால்பந்து 2018 : உருகுவே வெற்றியால் சௌதி வெளியேறியது

மாஸ்கோ

லகக் கோப்பை கால்பந்து 2018 லீக் போட்டியில் உருகுவே அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சௌதி அரேபியாவை போட்டிகளை விட்டு வெளியேற்றியது.

நேற்று உலகக் கோப்பை கால்பந்து 2018 லீக் ஆட்டத்தில் உருகுவே அணியும், சௌதி அரேபியா அணியும் மோதின.   உருகுவே அணியின் லூயிஸ் சௌரஸ் ஆரம்பம் முதலே தனது அபார விளையாட்டினால் சௌதி அரேபியாவுக்கு கடும் சவால் கொடுத்தார்.   இந்த போட்டி அவருக்கு 100 ஆவது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

உருகுவே அணியின் மற்றொரு வீரரான எடின்சன் கவானி 14 நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க வேண்டியதை தவற விட்டது அணிக்கு சற்றே சோர்வை தந்தது.    ஆனால் இந்த போட்டியில் லூயிஸ் சௌரஸ் அடித்த கோல் உருகுவே அணிக்கு மேலும் உற்சாகத்தை அளித்தது.   அந்த கோலை தடுக்க சௌதி அரேபியாவின் அல் ஒவைஸ் எவ்வளவோ முயன்றும் நடக்கவில்லை.

ஏற்கனவே ரஷ்யாவுடன் நடந்த போட்டியில்  சௌதி அரேபிய அணி கோல் எதுவும் அடிக்காததால் அந்த அணி இந்த போட்டியில் ஒரு கோலாவது அடிக்க மிகவும் முயன்று முடியாமல் போனது.  இறுதி வரை இந்தப் போட்டியில் சௌதி கோல் ஏதும் அடிக்கவில்லை.

இந்த போட்டியில் 1-0 என்னும் கோல் கணக்கில் உருகுவே வென்றதாக அறிவிக்கப்பட்டது.   அத்துடன் இதுவரை பாயிண்ட் எதுவும் எடுக்காத சௌதி அரேபியா போட்டிகளை விட்டு வெளியேறுகிறது.  ஏற்கனவே மொரோக்கோ அணி போட்டியில் இருந்து வெளியேறி உள்ளதால்  சௌதி அரேபியா போட்டியை விட்டு  வெளியேறும் இரண்டாம் அணி ஆகிறது.