தோஹா
ரும் 2022 ஆம் ஆண்டு நவம்பர் 21 முதல் கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கால்பந்து விளையாட்டு ரசிகர்களுக்கு ஒரு திருவிழாவான ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது.  கடந்த 2018 ஆம் அண்டு இந்த போட்டிகள் ரஷ்யாவில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெற்றது.  அப்போது 2022 ஆம் வருடத்துக்கான போட்டிகள் கத்தாரில் நடைபெறும் என முடிவு எடுக்கப்பட்டது.
கத்தாரில் ஜூன் ஜூலை மாதங்களில் கோடை கடுமையாக இருக்கும் என்பதால் நவம்பர் மாதத்துக்கு மாற்றப்பட்டது.    அதன் பிறகு அரசியல் காரணங்களால் கத்தாரில் ஃபிஃபா உலகக்கோப்பை 2022 போட்டிகள் நடத்த எதிர்ப்புக்கள் கிளம்பின.  அவை அனைத்தும் தற்போது ஓய்ந்து கத்தாரில் போட்டிகள் நடைபெறும் என இறுதி முடிவு எடுக்கப்பட்டது.
நேற்று ஃபிஃபா இந்த போட்டிகள் கத்தாரில் நவம்பர் 21 தொடங்கும் என அறிவித்துள்ளது.  தொடக்க விழா கத்தாரில் உள்ள அல்பேய்த் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.   இந்த அரங்கில் 60 ஆயிரம் பேர் அமர முடியும்.  இதன் கூறை ஒரு கூடார வடிவில் புது விதமாக அமைக்கப்பட்டதாகும்.   முதல் 4 போட்டிகள் உள்ளூர் நேரப்படி பகல் 1 மணிக்குத் தொடங்க உள்ளன.
இந்த போட்டிகள் கத்தார் நாட்டில் தோஹாவுக்கு அருகருகில் உள்ள நகரங்களில் நடக்க உள்ளன.  இதனால்  விளையாட்டு வீரர்களும் ரசிகர்களும் அதிக தூரமோ நேரமோ பயணம் செய்யத் தேவை இருக்காது.   போட்டியில் கலந்துக் கொள்ளும் 32 அணிகளும் தினமும் மாறி மாறி விளையாட  உள்ளதால் ரசிகர்கள் அனைத்து போட்டிகளையும் காண வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த போட்டிகளின் இறுதி ஆட்டம் 2022 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி அன்று லுசாயில் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.   இந்த அரங்கில் 80000 பேர் அமர முடியும்.   இந்த அரங்கிலும் அல்பேய்த் அரங்கிலும் அரை இறுதி போட்டிகளும் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.