மக்களுக்காக போராடுங்கள்- சோனியா காந்தி வலியுறுத்தல்

புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் இடைகால தலைவர் சோனியா காந்தி, நாட்டின் ஜனநாயகம் தற்போது கடினமான சூழ்நிலையில் உள்ளதால் கட்சியின் மாநில பொறுப்பாளர்கள் மற்றும் பொது செயலாளர்களை மக்கள் நலனுக்காக போராடுமாறு நேற்று கேட்டுக்கொண்டுள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்ட மாநில பொறுப்பாளர்கள் மற்றும் பொது செயலாளர்களுடன் கலந்துரையாடிய சோனியா காந்தி தெரிவித்துள்ளதாவது:
தற்போது நமது ஜனநாயகம் மிகவும் கடினமான ஒரு கால கட்டத்தில் இருப்பதால், அதனை எதிர்த்து கடுமையாகப் போராட வேண்டிய சூழ்நிலையில் நாம் இருக்கின்றோம். நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் பிரச்சனைக்காகவும் மக்களின் துன்பங்களை நிவர்த்தி செய்வதற்காகவும் நாம் போராட வேண்டியுள்ளது.

மக்களுடன் நேரடியாகத் தொடர்புடைய பிரச்சினைகளை அடையாளம் கண்டு, மக்களுக்காக அரசாங்கத்தை எதிர்க்கவும் நாம் தயங்கக் கூடாது. உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெண்களுக்கு எதிரான அநீதிகள் தொடர்கதையாகி வருகிறது இதனை நாம் எதிர்த்தாக வேண்டும்.

மேலும் விவசாய மசோதாவை எதிர்த்து பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர், மிகவும் கடுமையான சூழ்நிலையை எதிர்கொண்டு வரும் அவர்களுக்கு நாம் உதவியாக இருக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இன்று நமது ஜனநாயகம் மிகவும் கடுமையான சூழ்நிலைகளை எதிர் கொண்டு வருவதால், அதற்க்காக குடிமக்களின் அர்ப்பணிப்பு, சேவை ஆகியவற்றை உற்று நோக்கி, அனைத்து துறைகளிலும் நடக்கும் அநீதி, சமத்துவமின்மை மற்றும் பாகுபாடுகளுக்கு எதிரான உறுதியான போராட்ட குணம் காங்கிரஸ் கட்சியில் உள்ள ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் மோடி அரசின் தவறான கொள்கைகளால் நாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வேலையின்மை அதிகரித்து வருகிறது, விவசாயிகளுக்கு எதிரான விவசாய மசோதாவை மோடி அரசு கொண்டு வந்ததன் மூலம் நாட்டு பொருளாதாரத்தின் அடித்தளத்தை அவர் தாக்கியுள்ளார் என்று குற்றம்சாட்டியுள்ளார் சோனியாகாந்தி.