நாட்டை துண்டாட முயற்சிக்கும் ஆர்எஸ்எஸ் கொள்கைகளை எதிர்த்து போராட வேண்டும்: துஷார் காந்தி அழைப்பு

போர்பந்தர்:

இந்தியாவை துண்டாட முயற்சிக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கையை எதிர்த்து போராட வேண்டும் என மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


மகாத்மா காந்தியின் மனைவி கஸ்தூரிபாய் காந்தியின் 150-வது பிறந்ததின 2 நாள் கொண்டாட்டம் குஜராத்தில் உள்ள போர்பந்தரில் நடைபெற்றது.

இதில் பங்கேற்று மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தி பேசும்போது, “தங்களை காந்தியவாதிகள் என்று அழைத்துக் கொள்பவர்கள், ஆர்எஸ்எஸ் அமைப்பின் மிரட்டல் விடுக்கும் கொள்கைகளை எதிர்க்கும் சூழல் தற்போது இல்லை.

நான் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை எதிர்க்கவில்லை. நாட்டை பிளவுபடுத்தும் அவர்களது கொள்கைகளை மட்டுமே எதிர்க்கிறேன். அதனை நாம் இணைந்து எதிர்க்க வேண்டும்.

அவர்களது கொள்கையை எதிர்ப்பதன் மூலம் நாம் காந்தியவாதிகள் என்பதை உணர்த்த முடியும் என்றார்.