மெர்சல் காட்சிகளை நீக்க தயாரிப்பாளர் – நடிகர் சங்கம் எதிர்ப்பு

சென்னை:

மெர்சல் படத்தின் காட்சிகளை நீக்க தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது. அதில் உள்ள சில காட்சிகள், மத்திய பாஜக அரசை விமர்சிப்பதாக இருப்பதாக பாஜகவினர் கண்டனம் தெரிவித்தனர்.

அக்கட்சி தலைவர்களின் மிரட்டலை அடுத்து, குறிப்பிட்ட காட்சிகளை நீக்க படத்தின் தயாரிப்பாளர் ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் பலரும், “மத்தியில் அதிகாரம் இருப்பதை பயன்படுத்தி பாஜக, திரைத்துறையை மிரட்டுகிறது” என்று கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் மவுனமாக இருந்த நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் தற்போது தங்களது கருத்தை வெளியிட்டுள்ளன. “தணிக்கை செய்யப்பட்ட படத்தின் காட்சிகளை நீக்க வேண்டும் என்பது ஜனநாயக முறைப்படி தவறானது” என்று தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதே போல நடிகர் சங்கமும், “முறைப்படி தணிக்கை செய்யப்பட்ட படத்தின் காட்சிகளை நீக்கச் சொல்வது சரியல்ல” என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளது.