சமூக வலை தளங்களில் அவதூறு.. நடிகை போலீசில் புகார்

திருவனந்தபுரம்:

சமூக வலை தளங்ளில் தன்னை பற்றி பாலியல் ரீதியான அவதூறு பரப்புவதாக மலையாள நடிகை பார்வதி போலீசில் புகார் அளித்துள்ளார்.

மலையாள திரைப்பட நடிகை பார்வதி, மம்முட்டி நடத்த காஸபா திரைப்படத்தில் நடித்தார். சமீபத்தில் இவர் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல் குறித்த கருத்துக்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். பல படங்களில் அவரது நடிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலை தளங்களில் இவரத நடிப்பு பெரும் கண்டனமும், விமர்சனமும் எழுந்து வருகிறது.
.

இந்நிலையில் கேரளா டிஜிபி லோக்நாத் பெஹ்ரா, சைபர் கிரைம் பிரிவு, முதல்வர் அலுவலகம் ஆகியவற்றில் புகார் அளித்துள்ளார். அதில் சமூக வலை தளங்களில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக சிலர் வேண்டுமென்றே தன்னை பற்றி தவறான கருத்துக்களை பதிவிடுவதாகவும், பாலியல் ரீதியாக அச்சறுத்தலை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

சமூக வலை தளங்களில் 5 பதிவர்களின் கணக்குகளை போலீசார் ஆய்வு செய்தனர். டுவிட்டர் மற்றும் பேஸ்புக் தளங்களில் இந்த ஆய்வு நடந்தது. அப்போது இந்த கணக்குகள் போலி பெயர்களில் செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் குறித்த விபரங்களை அளிக்குமாறு டுவிட்டர் நிறுவனத்திடம் போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர். எர்னாகுளம் தெற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.