பிச்சை எடுத்த சினிமா இயக்குநர்.. கைகொடுத்த ஈரமுள்ள நடிகை.

முன்னா ஹூசைன்.  இவர் 1982-ஆம் ஆண்டு புனே பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்தவர். சிலிகுரியை சேர்ந்த இவர், சினிமா ஆசையில் மும்பையில் பல பாலிவுட் படங்களுக்கு புரொடக்ஷன் அசிஸ்டென்டாக பணியாற்றியுள்ளார்.

வாடகை வீட்டில் குடியிருந்து வந்த இவர், ஒரு கட்டத்தில் தனது மொத்த சேமிப்பு தொகையான ரூ.30 லட்சத்தைக் கொண்டு ஒரு படத்தைத் தயாரித்து இயக்கினார். 1998-ஆம் ஆண்டு எடுத்த அந்தப்படம் தோல்வியைத் தழுவியது.  இதனால் தனது குடும்பத்தையே இழந்துவிட்டார்.  வேறுவழியின்றி, கடந்த 15 வருடங்களாகப் பிச்சை எடுத்து வருகிறார்.  பாந்த்ராவில் உள்ள மெகபூப் ஸ்டூடியோ அருகில் நடைபாதையில் வசித்து வந்திருக்கிறார்.

இது பற்றி அறிந்த பிரபல இந்தி நடிகை ராஜஶ்ரீ தேஷ்பாண்டே இவருக்கு உதவ திட்டமிட்டார்.  சமூக சேவகருமான இவர், ஆங்கிரி இந்தியன் காடஸ், கிக், மம், மன்டோ உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.  செக்ஸி துர்கா, ஹராம் ஆகிய மலையாளப் படங்களிலும், சில டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், முன்னா ஹூசைன் பற்றி தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த கவுதம் என்பவர் மூலம் தகவல் தெரிந்துள்ளது நடிகை ராஜஶ்ரீ தேஷ்பாண்டேக்கு.  உடனே இவர் முன்னா ஹூசைனை சந்தித்துப் பேசியுள்ளார். ஆனால், அவருக்குக் கேட்கும் திறன் இல்லை. பக்கவாதமும் தாக்கி இருக்கிறது.

இதுபற்றி நடிகை ராஜஶ்ரீ தேஷ்பாண்டே கூறும்போது, “இவருக்குச் சிலர் உதவி இருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி.  சினிமாவில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட, சின்ன சின்ன வேலைகள் செய்து முயற்சி செய்திருக்கிறார்.  ஆனால் இவர் பொருளாதார ரீதியாகவும், மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் மொத்தமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்” என்கிறார்.  தனது முயற்சியின் மூலம் முன்னா ஹூசைனை ஹோம் ஒன்றில் சேர்த்திருக்கிறார், நடிகை ராஜஶ்ரீ தேஷ்பாண்டே.

சினிமா ஆசை இது போல எத்தனையோ பேரின் வாழ்வைப் புரட்டிப்போட்டுள்ளது.  அதே நேரம் எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் இவரைத்தேடி வந்து உதவிக்கரம் நீட்டிய ராஜஶ்ரீ தேஷ்பாண்டே நிச்சயமாகப் பாராட்டப்பட வேண்டியவர் தான்.

– லெட்சுமி பிரியா