திரைப்பட உதவி இயக்குநர் பேருந்தில் மரணம்!  கண்டுகொள்ளாத மக்கள்!

சென்னை:

பேருந்தில் பயணித்த உதவி இயக்குநருக்கு நடிகர் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மரணமடைந்ததும்,  அவரது இறுதி நிமிடங்களில் நெஞ்சுவலியால் துடித்தபோது பொதுமக்கள் எவரும் உதவாததும் தெரியவந்துள்ளது.

ஆசைததம்பி

மரணமடைந்த உதவி இயக்குநர் ஆசைத்தம்பியின் நண்பரும் சக உதவி இயக்குநருமான டி.ராஜகோபால் இது குறித்து பத்திரிகை டாட் காம் இதழிடம் தெரிவித்ததாவது

“ஆசைத்தம்பிக்கு சொந்த ஊர் திருச்சிக்கு அருகே உள்ள துறையூர் பாலகிருஷ்ணபட்டி. சென்னை கேகே நகரில் ஒரே அறையில் இருவரும் தங்கி இருந்தோம்.

திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற லட்சியத்தோடு பல வருடங்களுக்கு முன் சென்னைக்கு வந்தவர் ஆசைத்தம்பி. பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியதோடு, சில தொலைக்காட்சி தொடர்களை இயக்கவும் செய்திருந்தார். தற்போது திரைப்படம் இயக்கும் முயற்சியில் இருந்தார். இதற்காக தயாரிப்பாளர் ஒருவரிடம் கதை சொல்லி, அந்தப் படத்துக்காக பாடல் பதிவும் முடித்திருந்தார். வரும் வெள்ளிக்கிழமை அன்று தயாரிப்பாளரிடம் அட்வான்ஸ் வாங்கப்போவதாக மகிழ்ச்சியுடன் நண்பர்களிடம் சொல்லிவந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம், மாங்காடு மாரியம்மன் கோயிலுக்குச் சென்றிருக்கிறார். பேருந்தில் திரும்பும் வழியில், போரூர் பாய் கடை நிறுத்தம் அருகில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது.

இதைக்கண்ட நடத்துநரும் உடன் இருந்த பயணிகளும் அவரை பேருந்தில் இருந்து இறக்கிவிட்டனர். தனது நிலையை நண்பர்களுக்குத் தெரிவிப்பதற்காக தனது செல்போனை எடுத்து பேச முயற்சித்தபடியே பேருந்தில் இருந்து ஆசைத்தம்பி இறங்கியிருக்கிறார். ஆனால் பேருந்து நிறுத்தத்திலேயே மயங்கி விழுந்திருக்கிறார். அவரது செல்போன் பக்கத்தில் விழுந்திருக்கிறது. பேருந்து நிறுத்தத்திலும்  ஆசைத்தம்பியை யாரும்  கண்டுகொள்ளவிலை.

படப்பிடிப்பில் ஆசைத்தம்பி

அந்தப் பக்கம் வந்த யாரோ ஒரு பெண்மணி, ஆசைத்தம்பி விழுந்துகிடப்பதையும், பக்கத்திலேயே செல்போன் இருப்பதையும் கண்டு பதறியிருக்கிறார். அந்த செல்போனில் இருந்த எண்கள் சிலருக்கு அலைபேசி, “யாரோ ஒருவர் மயங்கி விழுந்திருக்கிறார்” என்று தகவல் சொல்லியிருக்கிறார்.

எனக்கும் அந்த பெண்மணிதான் அலைபேசினார்.

“யாரோ ஒருவர் பாய் கடை பேருந்து நிறுத்தம் அருகில் மயங்கிக்கிடக்கிறார். இந்த அலைபேசியில் உங்கள் எண் இருந்ததால் தகவல் சொல்கிறேன். காவல்துறைக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் சொல்லியிருக்கிறேன். உடனடியாக வாருங்கள்” என்றார்.

தொலைக்காட்சி தொடர் ஒன்றின் படப்பிடிப்பில் இருந்த நான், மற்ற நண்பர்களுக்கும் தகவல் கூறிவிட்டு உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்றேன்.

அதற்குள் ஆசைத்தம்பியை அருகில் இருந்த மருத்துவமனைக்கு காவல்துறை உதவியுடனே எடுத்துச் சென்றிருந்தனர். மருத்துவமனைக்கு நான் சென்றபோது, அங்கிருந்த மருத்துவர்கள், ஏற்கெனவே இவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

ராஜகோபால்

திருச்சியில் இருக்கும் அவரது மனைவிக்கு உடனடியாக தகவல் கூறினேன். அவர் குடும்பத்தினருடன் வந்தார். இதற்கிடையே .. உடலுக்கு உடற்கூறு செய்யப்பட்டது. நேற்று அவரது உடல் திருச்சி எடுத்துச் செல்லப்பட்டு இறுதிக் காரியங்கள் நடந்தன” என்று வேதனையுடன் பத்திரிகை டாட் காம் இதழிடம் தெரிவித்தார் ராஜகோபால்.

மேலும், அவர், “உயிருக்குப் போராடி துடித்த ஆசைத்தம்பிக்கு, பேருந்திலும், நிறுத்தத்திலும் எவரும் உதவவில்லை  என்பது பெரும் சோகம். உரிய நேரத்தில் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தால் ஒருவேளை அவர் பிழைத்திருக்கக்கூடும்” என்று வேதனையுடன்  பத்திரிகை டாட் காம் இதழிடம்  தெரிவித்தார் ராஜகோபால்.

மரணமடைந்த ஆசைத்தம்பிக்கு வயது நாற்பது. மனைவியும், பத்து வயதில் மகனும் ஏழு வயதில் பெண் குழந்தையும் இருக்கிறார்கள்.

உதவி இயக்குநராக பணியாற்றி வந்த ஆசைத்தம்பி, பொருளாதார சூழல் காரணமாக மனைவி குழந்தைகளை சொந்த ஊரான திருச்சி பாலகிருஷ்ணம்பட்டியில் இருக்க வைத்துவிட்டு, சென்னையில் அறை எடுத்துத்தங்கியிருந்தார்.

“பல காலமாக எதிர்பார்த்திருந்த திரைப்படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்துவிட்டது. வரும் வெள்ளிக்கிழமை அன்று தயாரிப்பாளரிடம் அட்வான்ஸ் வாங்குகிறேன். ஊரில் மனைவி குழந்தைகள் சிரமப்படுகிறார்கள். விரைவில் சென்னையில் வீடு பார்த்து அவர்களை அழைத்து வந்துவிட வேண்டும்” என்று நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருந்திருக்கிறார் ஆசைத்தம்பி.

ஆனால் அவரது ஆசை நிராசையாகிப் போய்விட்டதுதான் வேதனை!

செய்திக் கட்டுரை: டி.வி.எஸ். சோமு