நான் சொன்னது சரிதான்!: திருமாவுக்கு பா.ரஞ்சித் பதில்

“ஏழு பாராளுமன்ற தனித்தொகுதிகளில் பட்டியலின தலைவர்கள் கூட்டணி வைத்து வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்” என்று தான் கூறியது சரிதான் என திருமாவளவனுக்கு பதில் அளித்துள்ளார் பா.ரஞ்சித்.
இன்று  தனது “நீலம் பண்பாட்டு மையம்” சார்பாட நடக்க இருக்கும் “வானம் கலைத்திருவிழா” குறித்து அறிவிப்பதற்காக பா.ரஞ்சித் செய்தியாளர்களை சந்தித்தார்.

(வானம் திருவிழா செய்தி:  https://patrikai.com/thousands-drum-parai-music-margazhi-festival-film-director-pa-ranjith-announcement-chennai-december/    )

அப்போது பா.ரஞ்சித்திடம் தனிப்பட்ட முறையில்  patrikai.com  இதழ் சார்பாக சில கேள்விகளை வைத்தோம்.

பா.ரஞ்சித் – திருமாவளவன்

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் ஏழு தனித்தொகுதிகளிலும் பட்டியலின அமைப்புகள் கூட்டணி வைத்து போட்டியிட வேண்டும் என்று நீங்கள் கூறியது பட்டியலின மக்களை மேலும் பிறரிடம் இருந்து பிரித்துவிடும் என்றும், அம்பேத்கரே இதை விரும்பவில்லை என்றும் வி.சி.க. தலைவர் திருமாவளவன் தெரிவித்திருக்கிறாரே..!

நான் சொன்னது சரிதான். தனித்தொகுதிகளில் பட்டியலின அமைப்புகள் இணைந்து போட்டியிடுவதே அந்த இன மக்களின் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் பேச உதவும்.  அம்பேத்கார் கோரிய இரட்டை வாக்குரிமை பற்றி படித்துப்பாருங்கள். நான் கூறியதில் இருக்கும் நியாயம் விளங்கும்.

அகண்டபாரதம் படைப்போம் என்று ஒரு கூட்டத்தில் நீங்கள் பேசியது இந்துத்துவாவின் குரல் என்று சிலர் விமர்சிக்கிறார்களே..

அப்படி சிலர் விமர்சிக்கிறார்கள். ஆனால் நான் எங்கும் அதுபோல பேசவில்லையே..!

பூவைஜெகன் மூர்த்தி நடத்திய கூட்டத்தில்தான் நீங்கள் அப்படி பேசியிருக்கிறீர்கள். அந்த வீடியோவும் சமூகவலைதளத்தில் இருக்கிறது..

(சில விநாடிகள் யோசித்தவர்… பிறகு…) ஓ.. ! ஆமாம்!  நான் குறிப்பிட்டது ஆர்.எஸ்.எஸ்ஸின் அகண்ட பாரதம் அல்ல. அண்ணல் விரும்பிய அகண்ட பாரதம். அதாவது நாடு முழுதும் தலித் மக்கள் எழுச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பேசினேன். அன்றைய பேச்சில் தலித்துகளிடமிருந்து பிடுங்கப்பட்டிருககும் தலித் நில மீட்பு குறித்தும் பேசியிருப்பேன். நிலம்தான் ஆதாரம். இந்த கோணத்தில்தான் பேசினேன்.

ஆனால் ஆர்.எஸ்.எஸ். சொல்வது பாகிஸ்தான், ஆப்கன் நாடுகள் உள்ளிட்ட அகண்ட பாரதம். நான் அதைக் குறிப்பிடவில்லை.

ஒன்றுபட்ட – சமூக முரண்களை நீக்கும் – இடத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என்கிற அர்த்ததில் பேசியிருப்பேன்.

தவிர, ஒரு முழக்கத்தைத் தட்டையாக பார்க்கக்கூடாது. அதன் உள்ளடக்கத்தையும் வடிவத்தையும் பொருத்து பிரித்துப் பார்க்க வேண்டும்.

உங்களது நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் வானம் கலைவிழாவில் அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் ஆகியோரது புத்தகங்கள் கொண்ட நூலகம் அமைக்கப்படும் என்று இன்று அறிவித்திருக்கிறீர்களே..!

ஆமாம்.. அதற்கென்ன?

அம்பேத்கர், மார்க்ஸ், மாவோ என்றெல்லாம் பா.ரஞ்சித் பேசுவார். ஆனால் பெரியார் குறித்து அவர் பேசமாட்டார் என்று ஒரு விமர்சனம் இருக்கிறதே..

அது தவறான விமர்சனம். நான் பெரியார் பற்றி நிறைய பேசியிருக்கிறேன். நான் பெரியார் நூல்கள் பலவற்றைப் படித்திருக்கிறேன். படித்துக்கொண்டும் இருக்கிறேன். அவரிடமிருந்து நான்  கற்றுக்கொண்டிருக்கிறேன். இதற்கு மேல் விமர்சிப்பவர்களுக்கு என்னிடம் பதில் இல்லை.  

மதன் கார்க்கி எழுதி சம்பு பாடியிருக்கும் “பெரியார் குத்து” ஆல்பத்தை பலரும் பாராட்டியிருக்கிறார்கள். அதே நேரம் சிலர் கடுமையாக விமர்சிக்கவும் செய்கிறார்களே..!

விமர்சிக்கட்டுமே…  பாராட்டுக்கள் மட்டுமல்ல.. விமர்சனங்களும் நம்மை ஊக்குவிக்கும். சரிப்படுத்தும்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: film director  pa.ranjith answered vck thirumavalavan  seven reserve Parliamentary constituencies     election, பா.ரஞ்சித் இயக்குநர் திருமாவளவன் வி.சி.க. தனித்தொகுதி ஏழு பாராளுமன்றம் தேர்தல், பேட்டி
-=-