அடுத்த முதல்வர் அனில் கபூர் : டிவிட்டர் பதிவால் மகாராஷ்டிராவில் பரபரப்பு

மும்பை

திரைப்பட ரசிகர் ஒருவர் டிவிட்டரில் நடிகர் அனில் கபூரை அடுத்த மகாராஷ்டிர முதல்வராகத் தேர்வு செய்யக் கோரியதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக – சிவசேனா கட்சிக் கூட்டணி வெற்றி பெற்றும் அரசு அமைக்கப்படாமல் உள்ளது.   முதல்வர் பதவியை இரு கட்சிகளும் இரண்டரை ஆண்டுகள் பகிர வேண்டும் என்னும் சிவசேனா கட்சியின் நிபந்தனையை பாஜக ஏற்கவில்லை.   துணை முதல்வர் பதவியை அளிப்பதாக பாஜக தெரிவித்ததை சிவசேனா ஏற்கவில்லை.

இந்நிலையில் திரைப்பட ரசிகரான விஜய் குப்தா என்பவர் டிவிட்டரில் ஒரு புதிய யோசனையைத் தெரிவித்துள்ளார்.   அவர் அனில் கபூர் நடித்த  நாயக் இந்திப்பட புகைப்படத்துடன் “மகாராஷ்டிராவில் ஒரு தீர்வு வரும் நேரம் வரை அனில் கபூரை முதல்வராக்குவோம்.  அவர் ஏற்கனவே திரைப்படத்தில் ஒரு நாள் முதல்வராகப் பணி ஆற்றி உள்ளார்” எனப் பதிந்துள்ளார்.

சங்கர் இயக்கத்தில் தமிழில் அர்ஜுன் நடிப்பில் வெளி வந்த முதல்வன் படத்தின் இந்திப் பதிப்பு நாயக் ஆகும்.   இதில் கதாநாயகனான அனில் கபூர் ஒரு நாள் முதல்வராகப் பணி ஆற்றுவார்.   இந்த டிவிட்டர் பதிவு மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இதற்கு நடிகர் அனில்கபூர் தாம் நாயகனாக நடிப்பது மட்டுமே நல்லது எனப் பதில் அளித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி