கொரோனா அச்சம்: ‘மாஸ்டர்’ படத்தின் வெளியீடும் தள்ளிவைக்க வாய்ப்பு….!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் 157 நாடுகளில் ஒரு லட்சத்து 68, 897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சீனாவில் மட்டும் சுமார் 81,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதர நாடுகளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 87,000 அதிகரித்துள்ளது.

சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரும், உயிரிழந்தோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு கொரோனாவால் 24, 747 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 1,809 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் 81 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. இதில் 64 இந்திய குடிமக்கள் மற்றும் 17 வெளிநாட்டினர் அடங்குவார்கள். 17 வெளிநாட்டினர்களில் 16 பேர் இத்தாலியர்கள் மற்றும் 1 கனடா நாட்டை சேர்ந்தவர்.

இந்நிலையில் கடந்த வாரம் வெளியான ‘தாராள பிரபு’, ‘வால்டர்’ மற்றும் ‘அசுரகுரு’ ஆகிய படங்கள் எதற்குமே போதிய மக்கள் கூட்டம் வரவில்லை. இதனிடையே, கேரள எல்லையோரத்தில் உள்ள திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. இதனை முன்வைத்து புதிய படங்களின் வெளியீடுகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.

மார்ச் 20-ம் தேதி வெளியாகவிருந்த ‘காவல்துறை உங்கள் நண்பன்’ மற்றும் ஏப்ரல் 2-ம் தேதி வெளியாகவிருந்த ‘காடன்’ ஆகிய படங்கள் தங்களது வெளியீட்டைத் தள்ளிவைத்துள்ளன.

மேலும், ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகவிருக்கும் ‘மாஸ்டர்’ படத்தின் வெளியீடும் தள்ளிவைக்கப்படும் எனத் தெரிகிறது.