Random image

திரைவிமர்சனம்: சர்கார்

முதலில் ஒரு விசயத்தைச் சொல்லிவிட வேண்டும். இப்படத்தின் கதை குறித்த சர்ச்சை எழுந்தபோது, வருண் ராஜேந்திரன் எழுதிய செங்கோல் கதை என்று, பல பேட்டிகளில்  கே.பாக்யராஜ் தெரிவித்தாரே… அந்த செங்கோல் கதைதான் இந்த சர்கார் கதை.

ஜிஎல் என்ற உலகின் நம்பர் ஒன் கம்பெனியில் அமெரிக்காவில் சிஇஓ-வாக  உயர்ந்த பதவியில் இருப்பவர் தமிழர் சுந்தர் ராமசாமி. ஓட்டு போடுவதற்காக இந்தியாவிற்கு வருகிறார். ஆனால், அவருக்கு முன்பாவே யாரோ கள்ள ஓட்டு போட்டுவிடுகிறார்கள். அதனால், ஆத்திரமடையும் அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தனக்கு  மீண்டும் வாக்களிக்கும் உரிமை கோருகிறார். அவரைப்போலவே மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் மீண்டும் வாக்களிக்கும் உரிமையைக் கேட்டு வழக்கு தொடுக்கிறார்கள். இதனால், நீதிமன்றம் தேர்தலை நிறுத்திவிட்டு மறுதேர்தல் நடத்த உத்தரவிடுகிறது.

இதனால் அரசியல்வாதிகள் கடும் அதிர்ச்சி அடைகிறார்கள்.  அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

சிஇஓ சுந்தர் ராமசாமி ஆக விஜய். தன்னுடைய இளமைத் தோற்றத்தைக் கொஞ்சம் தியாகம் செய்து லேசாக நரைத்த தாடியுடன் வருகிறார். அது பரவாயில்லை.

ஆனால் வழக்கமான விஜய் இந்தப் படத்தில் மிஸ்ஸிங்.  எப்போதும் இயல்பாக நடிப்பார்.. ரசிக்கவைப்பார். ஆனால் இந்தப் படத்தில்  நடிப்பு மிக செயற்கை.

தவிர அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு மனிதனை ப்ளே பாயாகவா காண்பிப்பார்கள். (கூகுள் நிறுவன சி.இ.ஓ. சுந்தர் பிச்சையை மனதில் வைத்து  இந்த கேரக்டரை உருவாக்கினேன் என்றாரே இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்.. . அப்படியானால் சுந்தர் பிச்சை ப்ளேபாய் ஆசாமியோ?)

அதுவும் விஜய் அறிமுகக்காட்சிக்கு அடுத்தே தேவையின்று டூ பீஸ் மங்கைகளுடன் ஆட்டம். அந்த பாடலும் ரசிக்கவைக்கவில்லை.

ஒரு நடிகரின் பெயர் வாங்குவது அவரது நடிப்பால் மட்டுமல்ல.. ஒட்டுமொத்த காட்சியாலும்தான். ஆனால் இந்தப் படத்தில் பல காட்சிகள் எரிச்சலூட்டும் விதமாக உள்ளன.

பெரிய நிறுவனத்தில் சி.இ.ஓ.வாக இருப்பவர், மூளையை பயன்படுத்தி திட்டமிட்டுத்தான் எதிரிகளை வெல்வார். ஆனால் இதில் சி.இ.ஓ. விஜய், கண்மூடித்தனமாக பலரை அடித்து துவம்சம் செய்கிறார்.

அதுவும் . வார்டு கவுன்சிலர்கள் கூட்டத்திர்கு போய் பந்தாடுகிறார். இதெல்லாம் நடக்கிற விசயமா?

சரி போகட்டும் என்றால்… முன்னாள் முதல்வர் கட்சியின் பொதுக்கூட்டம் நடக்கிறது. அவர்களுக்கு எதிராக செயல்பட்டு வரும்  விஜயும் அவருடன் நூறு பேரும் புகுந்து மேடையேறி அந்தக் கட்சிக்காரர்களையே மிரட்டிவிட்டு வருகிறார்களாம்.

“சினிமாதானே..” என்று சொன்னாலும், சினிவமாவில்கூட இப்படி வராது ஏ.ஆர். முருகதாஸ்!

அடுத்து.. அறிமுகக் காட்சியிலேயே சிகெரட் பிடித்தபடி வருகிறார் விஜய்.பிறகு வி.ஐ.பிக்களுடன் நடக்கும் கூட்டத்திலும் ஸ்டைலாக சிகெரட் பிடிக்கிறார்.

திரையில் தோன்றும் நடிகர்களை தலைவர்களாக ஏற்று பின்பற்றும் மனநிலை கொண்ட பாவப்பட்ட சமூகம் இது. இதில் நல்லதைச் சொல்லாவிட்டாலும் அல்லதை தவிர்க்கலாமே விஜய்!”

படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ். பாடல்களில் விஜய்யுடன் வருகிறார். ஓரிரு காட்சிகளில் ஏதே பேசுகிறார் என நினைவு. அவ்வளவுதான்.

அதே நேரம் வரலட்சுமி பின்னியிருக்கிறார். வில்லத்தனமான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். “அவன் கார்ப்பரேட் கிரிமினல்னா, நான் கருவிலேயே கிரிமினல்” என வசனம் பேசி அதிரவைக்கிறார்.

படத்தில் முக்கிய வில்லனாக வரும் பழ.கருப்பையா நடிப்பில் ஊஹூம்..

வழக்கம்போல இன்னொரு வில்லனான ராதாரவி அசத்தல்.

யோகிபாவு ஓகேதான். ஆனால் கள்ள ஓட்டு போட்ட இவர்,  கார்ப்பரேட் சிஇஓ விஜய்யின் நண்பராவதை  நம்ப முடியவில்லை.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் ரசிக்கவைக்கின்றன என்று வழக்கம்போல் எழுத விரல்கள் துடிக்கின்றன.. ஆனால் நிஜம் அப்படி இல்லையே.. நண்பனே.. நண்பனே!

முருகதாஸ், ஜெயமோகன் அரசியல் வசனங்கள் சில ரசிக்க சிந்திக்க வைக்கின்றன.

“ஓட்டுப்போடும் 20 சதவீத மக்கள்தான் ஓட்டுப்போடாத 80 சதவீத மக்களையும் சேர்த்து யார் ஆள்வது என்று முடிவெடுக்கிறார்கள். அதனால், ஒவ்வொருவரும் கண்டிப்பாக ஓட்டு போட வேண்டும்” என்ற கருத்து ஏற்கத்தக்கதுதான்.

அதே போல 49 ஓ போலவே 49 பி என்கிற சட்டப்பிரிவு இருப்பதையும் அதைப் பயன்படுத்தினால் மாற்றம் ஏற்படும் என்பதையும் வலியுறுத்தியிருப்பதையும் பாராட்டலாம்.

(இந்தப் பாராட்டுக்குரியவர் ஏ.ஆர்.முருகதாசா  வருண் ராஜேந்திரனா என்று தெரியவில்லை.)

மொத்தத்தில் ரசிக்க வைக்கும் காட்சிகள் சில.. எரிச்சலூட்டும் காட்சிகள் பல.

வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க கண்டெய்னரில் பணத்தைக் கடத்துவது, மின்சார  ஒயர்கள் பராமரிக்கப்படாமல் அறுந்து தரையில் கிடப்பது, போக்குவரத்துக் கழகங்களில் லஞ்சம் வாங்கிக்கொண்டு  ஓட்டத்தெரியாதவர்களுக்கு வேலை கொடுத்து விபத்து ஏற்பட காரணமாவது.. என்று நடப்பு விவகாரங்களை சொல்லியிருக்கிறார்கள்.

பாராட்ட வேண்டியதுதான். அதோடு நாட்டையே காப்பதாக சொல்லும் நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி கறுப்பாய் பதுக்குவது,  அடுத்தவர் கதையைத் திருடி இயக்குநர்கள் படம் எடுப்பது, தனது ரசிகர்களிடமே (திரையரங்கில்) அநியாயத்துக்கு கட்டண் வாங்கி ஏமாற்றுவது.. இது போன்ற அநியாயங்கள்  பற்றியும் படம் எடுக்கலாம் ஏ.ஆர்.முருகதாஸ் & விஜய்.