திரைவிமர்சனம்: செய்

ஜித் நடித்து வெளிவந்த என்னை அறிந்தால், சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த காக்கிச் சட்டை இரண்டு படங்களும் ஒரே (ஹாலிவுட்) கதையை அடிப்படையாக கொண்ட திரைப் படங்கள்தான். மனிதர்களின் உடல் உறுப்புக்கள் திருடப்படுவது தான்  ஒன்லைன்.  இரண்டு படங்களிலும் காவல்துறை அதிகாரிதான் கதாநாயகன்.

அதே கதையை வைத்து வந்திருக்கும் இன்னொரு படம், செய். ஆனால் நாயகன், காவல்துறை அதிகாரி அல்ல. குடிசைப்பகுதியில் வசிக்கும் சாதாரண இளைஞன்.

ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் மகன் நகுல். திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற வேண்டும் என்பது அவரது லட்சியம்.  அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

ஒருநாள் அவரது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போக..  இவர் ஆம்புலன்ஸ்லை ஓட்டுகிறார்.  இறந்து போன ஒருவரின் உடலை வேறு ஊருக்கு எடுத்துச் செல்கிறார். ஆனால்,  உடலுடன் வருபவர்கள் அந்த உடலை யாருக்கும் தெரியாமல் மலைப் பகுதியில் அழிக்க திட்டமிடுகிறார்கள்.

இதையடுத்து அந்த உடலுடன் தப்பிக்கிறார் நகுல். இறந்து போய் பிணமாக இருக்கும் நபர்தான் நகுலின் அப்பாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது முதலுதவி செய்து காப்பாற்றியவர்.

அந்த நபர் எப்படி மரணமடைந்தார் இறந்து போனார், அந்த உடலை ஏன் யாருக்கும் தெரியாமல் அழிக்க நினைக்கிறார்கள் என்பதைக் கண்டறியும்  முயற்சியில் ஈடுபடுகிறார் நகுல்.  அதை எப்படி சாதித்தார் என்பதே மீதிக்கதை.

ஆரம்பகாட்சிகளில் நகுலின் நடிப்பு (வழக்கம்போல) ஓவர் டோஸ். சினிமாவில் நடிக்க ஏங்குவது, அதற்காக அதிதீவிரமாக முயற்சிப்பது தீவிரமாக நடித்துத்தீர்க்கிறார்.

ஆனால் இடைவேளைக்குப் பிறகு கதை வேகம் பிடித்ததும் தனது அதீத நடிப்பை குறைத்துக்கொண்டு இயல்பு நிலைக்கு வந்துவிடுகிறார் நகுல். அதுவரை பாராட்டலாம்.

படத்தின் நாயகி ஆஞ்சல் முஞ்சால்.  நகுலும் இவரும்  பார்க்காமலேயே காதலிக்க ஆரம்பித்து, இறுதிவரை  போனிலேயே காதலித்துத்தீர்க்கிறார்கள். ( ஒரு முறை  காதலியின் புகைப்படத்தைப்  நகுல் பார்ப்பதோடு சரி.)

உடல் உறுப்புக்களை கடத்துபவர்கள் யார் என்பதைக் கண்டுபிடித்து பலியாகும் செய்தியாளராக  அஸ்கர் அலி, நடித்திருக்கிறார். அவரது  காதலியாக சந்திரிகா ரவி. இருவருமே சிறிது நேரம் வந்தாலும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

பிரகாஷ்ராஜ், நாசர் ஆகியோரும் சிறிது நேரமே வந்தாலும் வழக்கம்போல சிறப்பான நடிப்பு.

நிக்ஸ் லோபஸ் இசையில் பாடல்கள்  சொல்லிக்கொள்ளும்படி இல்லை. விஜய் உலகநாத் ஒளிப்பதிவு ரசிக்கவைக்கிறது.

வில்லன் யார் என்பது குறித்த சஸ்பென்ஸ் ரசிக்கவைக்கிறது.

#film #review #sei