படத்தயாரிப்பாளர் வருண் மணியன் மீது தாக்குதல்! காரணம் என்ன?

சென்னை,

பிரபல படத்தயாரிப்பாளரும், திரிஷாவின் முன்னாள் காதலருமான வருண்மணியன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அவரை தாக்கியவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தமிழ் திரைப்படமான காவியத்தலைவன்,  வாயை மூடி பேசவும் போன்ற படங்களை தயாரித்தவர் வருண்மணியன். இவர் ரேடியன்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

படத்தயாரிப்பின்போது இவருக்கும் திரிஷாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதையடுத்து இருவரும் திருமணம் செய்யப்போவதாக, நிச்சயதார்ததம் நடைபெற்றது. ஆனால், திடீரென திரிஷா அவருடனான உறவை முறித்தார்.

இந்நிலையில், வருண்மணியன் நடிகை பிந்துமாதவியுடன் சுற்றினார். தற்போது, முன்னாள் திமுக அமைச்சரும்,  தினகரன் பத்திரிகை  நிர்வாகி கே.பி.கந்தசாமியின் பேத்தியான கனிகாவை காதலித்து வருகிறார். இவர் கே.பி.கே. குமரனின் மகள் ஆவார். இருவருக்கும் திருமணம் நடத்தி வைக்க குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் வருண் மணியனுக்கு கொலை மிரட்டல் தொடர்ந்து வந்ததாக கூறப்பட்டது. அதன் காரணமாக அவருக்கு போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டது. தற்போது எந்த பிரச்சினை களும் இல்லை என்றதால் அவருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பும் விலக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மாலை அலுவலகம் முடிந்து லிப்ட் வழியாக வீட்டுக்கு திரும்பும்போது, அவருடன் வந்த இரண்டுபேர் தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் லிப்டின் உள்ளேயே வருண் மணியனை கடுமையாக தாக்கி உள்ளனர்.

அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த பணியாளர்கள் தாக்கிய இருவரையும் சுற்றி வளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

வருண்மணியன் மீதான தாக்குதலுக்கு படப்பிரச்சினை காரணமா அல்லது அவரது காதல்கள் காரணமா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.