சிரியா:

ஈராக் எல்லையில் அமைந்துள்ள சிரியாவின் கடைசிப் பகுதியையும் மீட்டு, ஐஎஸ் தீவிரவாத படைகளை அமெரிக்க தலைமையிலான  குர்திய படைகள் தோற்கடித்துள்ளன.


குர்திய சிரியன் ஜனநாயக படைகளின் செய்தி தொடர்பாளர் முஸ்தபா பாலி கூறும்போது, ” வெற்றிக்கு பிறகு கிழக்கு சிரியாவின் பகாவுஜ் கிராமத்திலிருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளியேறவும்,சரணடையவும் குர்திய படைகள் மனிதநேய அடிப்படையில் உதவியிருக்கின்றன.

கடந்த வாரங்களில் உக்கிரமான போர் நடந்தபோது, எல்லையை தாண்டி செல்ல முடியாத நிலையில் மக்கள் இருந்தனர்.

ஐஎஸ் கட்டுப்பாட்டிலிருந்த பகுதியிலிருந்து கடந்த பிப்ரவரி 20-ம் தேதியிலிருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேறியுள்ளனர். ரணடைந்தவர்களில் ஐஎஸ் தீவிரவாத படையினரும் அடங்குவர்” என்றார்.

இதற்கிடையில், ஐஎஸ் அமைப்புக்கு எதிரான கடைசிப் போரில் பிடிபட்ட அந்த அமைப்பின் தீவிரவாதிகளை பிரிட்டன் மற்றும் பிற ஐரோப்பிய கூட்டணி நாடுகள் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதே கருத்தை பிரிட்டனின் வெளிநாட்டு உளவுத் துறை தலைவரும் தெரிவித்திருந்தார். சிரியாவில் ஐஎஸ் அமைப்பு ஒடுக்கப்பட்ட பின்பும், அந்த அமைப்பு மீண்டும் தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையே, தாங்கள் வீழ்த்தப்பட்டாக கூறப்படுவதை ஐஎஸ் அமைப்பு மறுத்துள்ளது.