சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருப்பதால், வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. இதையடுத்து, இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் பணிகளை முன்னெடுத்துள்ள தேர்தல் ஆணையம், கடந்த ஆண்டு (2020) தமிழகத்தில் வாக்காளர் சேர்ப்பு பணிகளை தொடங்கியது. கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதியில் இருந்து டிசம்பர் 15ம் தேதி வரையிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் மாற்றத்திற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன. அதற்கான சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டது.

அதன்படி, வாக்காளர்பட்டியலில் புதியதாக பெயர் சேர்ப்பு, திருத்தம், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்டவைகளுக்காக 29 லட்சத்து 72 ஆயிரத்து 899 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.  இடம் பெயர்தலுக்கு  (படிவம் 6)  20 லட்சத்து 62 ஆயிரத்து 424 விண்ணப்பங்களும்,  திருத்தம் மேற்கொள்ள 3 லட்சத்து 27 ஆயிரத்து 991 பேரும், ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்வதற்கு 1 லட்சத்து 83 ஆயிரத்து 253 பேரும் விண்ணப்பித்து இருந்ததாக தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.

இதையடுதது இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி டிசம்பர் 15-ம் தேதி முதல் நடைபெற்று வந்தது. தற்போது அந்த பணிகள் முடிவடைந்த நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.  தமிழக்ததில் உள்ள  அனைத்து மாவட்டங்களிலும் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் தமிழக தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.