சென்னை: ஆன்லைன் தேர்வுகளுக்காக இறுதியாண்டு மாணவர்கள் தங்களின் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக,  இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை தவிர மற்ற அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.  இதையடுத்து இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி,   பொறியியல் மாணவர்களுக்கு வரும் செப்.22 ஆம் தேதி முதல் செப்.29 ஆம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக தேர்வுகள் நடைபெறும் என்றும்  அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்தது.

இந்த நிலையில்,   மாணவர்கள் ஆன்லைன் மூலம் தேர்வெழுத லேப்டாப், கணினியில் கேமரா, மைக்ரோ போன் வசதியுடன் இணைய வசதி இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ள அண்ணா பல்கலைக்கழகம்,   இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு மாணவர்கள் உடனே தங்களது விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என அண்ணா பல்கலை. உத்தரவிட்டுள்ளது.

STUCOR என்னும் செயலியில் முதுகலை மற்றும் இளங்கலை மாணவர்கள் தங்களது செல்போன் எண், இ-மெயிலை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.