சென்னை:
தென்மாவட்டங்களிலிருந்து ஆந்திரா மற்றும் ஆந்திராவை தாண்டிச் செல்லும் போக்குவரத்தை எளிதாக்க ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்குப் பின்பு 62 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலையை திறக்க சென்னை தயாராகி வருகிறது.

வண்டலூரிலிருந்து மீஞ்சூர் வரையிலான சாலை நிறைவடையும் நிலையில் உள்ளதால் இது நவம்பர் மாதம் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் முதல் கட்டமாக வண்டலூர் முதல் நெமிலிச்சேரி வரை 2014-ஆம் ஆண்டிலேயே போக்குவரத்து திறக்கப்பட்டிருந்தாலும், இரண்டாம் கட்டமாக நெமிலிச்சேரி முதல் மீஞ்சூர் வரை நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக தாமதமாகி வந்தது, ஆனால் தற்போது இது முடிவடையும் தருவாயில் உள்ளது என்று சாலை மேம்பாட்டு கழகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தேசிய நெடுஞ்சாலைகளை நகரத்துடன் இணைப்பதன் மூலம் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும் என்றும் இந்த நெடுஞ்சாலை நவம்பர் மாதம் திறக்கப்பட உள்ளது என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த நெடுஞ்சாலை நவம்பர் மாதம் திறக்கப்பட்டு விட்டால் இங்கு நான்கு சுங்கச் சாலைகள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல் சுங்கச்சாவடி வண்டலூரிலிருந்து நஸ்ரத்பேட்டையிலும் (19.65km), இரண்டாவது சுங்கச்சாவடி கொலப்பஞ்செரியில் தொடங்கி நெமிலிச்சேரி வரையிலும்(29.65km), மூன்றாவது சுங்கச்சாவடி நெமிலிச்சேரியிலிருந்து படியநல்லூர்(47.90km) வரையிலும், கடைசியாக நான்காவது சுங்கச்சாவடி படியநல்லூரிலிருந்து மீஞ்சூர் வரை(60.15km) அமைக்கப்படும் என்றும், இந்த சுங்கச்சாவடிகள் தமிழ்நாட்டு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.