ரஜினிக்கு மைனஸ் மார்க்!: “காலா” வசனகர்த்தா ஆதவன் தீட்சண்யா பேட்டி

 

ஆதவன் தீட்சண்யா…  பெயர் பெற்ற படைப்பாளி. புறத்திலிருந்து, தந்துகி உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகள், லிபரல் பாளையத்துக் கதைகள் உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகள், மீசை என்பது வெறும் மயிர் என்கிற புதினம் என்று இவரது படைப்புகள் கவனத்தை ஈர்த்தவை.

த.மு.எ.க.ச.வின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

சமீபத்தில் வெளியான காலா படத்தின் வசனகர்த்தா என்றால் இன்னும் பலருக்கும் தெரியும்.

அவரிடம், “காலா” குறித்து ஒரு பேட்டி…

கே: சமூக அக்கறைகொண்ட படைப்பாளி நீங்கள். திரைப்படத்துக்கு வசனம் எழுதியதை எப்படி  உணர்கிறீர்கள்?

ப: மக்களுக்காக எழுதுகிறோம். நம் கருத்துக்களை முடிந்தவரை பெரிய அலவில் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்கிற எண்ணம் உண்டு. ஊடகங்களோடு இணைந்து செயல்படுவதும் அரசியல் பணிதான். ஆகவே மாஸ் மீடியாவில் பணியாற்றுவதில்  மனத்தடை ஏதும் இருக்கவில்லை. எனக்கும் இயக்குநர் ரஞ்சித்துக்கும் கருத்தியல் புரிதல் இருந்தது. ஒரு எழுத்தாளருடன் இணைந்து பணிபுரியும்போது அவரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்கிற பார்வை அவருக்கும் இருக்கிறது. ஆகவே திரைவாய்ப்பை ஏற்றுக்கொண்டேன்.

கே: வசனம் எழுதிய அனுபவம் எப்படி இருந்தது?

இதுதான் முதல் திரைப்படம்?

முழுமையாக என்னுடைய வசனம் அல்ல. ஏற்கெனவே பா.ரஞ்சித் எழுதிய பிறகு மகிழ்நனும் நானும்  பணியாற்றினோம். திருநெல்வேலி மக்கள் தாராவியில் எப்படி பேசுவார்களோ அப்படி மகிழ்நன் மாற்றினார். மூவரின் கூட்டு உழைப்பு இது.

கே: உங்களது வசனத்துக்கு வந்த விமர்சனங்களில் உங்களை பாதித்தது எது?

இன்னும் விமர்சனமே வரவில்லை. அடிப்படை மக்களுக்கு ஆதரவான படம், வசனம் என்கிற ஆதரவான குரல் ஒருபக்கம். இது பாராட்டு.   இப்படி அடிமட்ட மக்களுக்காக பேசுவதாலேயே படத்தை நிராகரித்து, “இது டெம்ளேட் படம்”  என்று எதிர் நிலையில் வைத்து விமர்சனம் வருகிறது. மற்றபடி  முழுமையன விமர்சனம் வரவில்லை. குறிப்பாக படம் விவாதிக்கக் கூடிய கருப்பொருள் பற்றி விமர்சனம் வரவில்லை.

நிலம் என்பது அரசாலும், அரசு ஆதரவாளர்களாலும் ஆக்கிரமிக்கப்படக்கூடிய கதை. இது உலகெங்கிலும் நடக்கிறது. காலா படத்தில்கூட, தாராவி போராட்டத்துக்குப் பிறகு  சிங்காரச் சென்னைக்கு நகர்வதாக படம் முடியும்.. இது எந்தவொரு நகரத்தைக்கும் வரும். இது குறித்தெல்லாம் விமர்சனங்கள், கருத்துக்கள் வரவில்லை என்பது என் கருத்து.

கே: படம் வரும் முன்பு வாழ்த்தியவர்கள், பிறகு எதிர்த்ததையும்…  எதிர்த்தவர்கள் வாழ்த்தியதையும் “காலா”வில் பார்க்க முடிந்தது.  இதை எப்படிப் எடுத்துக்கொள்கிறீர்கள்?

ப: இந்த முன்முடிவு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை.

சமூக நோக்காளராக ரஞ்சித் செய்யும் ஒவ்வொன்றையும் எதிர்ப்பவர்கள் இருக்கிறார்கள்.  அவர் இயக்கிய, “மெட்ராஸ்” படம் வந்தபோது ஒரு போஸ்டர்தான் முதலில் ரீலீஸ் ஆனது. கால்பந்து… வட சென்னை…  சிம்பல். இதைமட்டுமே வைத்து அது வேறு ஒருவரது கதை என்று பிரச்சினையை கிளப்பினார்கள்.

அது போல “கபாலி” வெளியாவதற்கு  முன்பே இது டான் படம்தான் என்றார்கள்.

இதற்கிடையே கபாலியில் ரஞ்சித், பெரியாரை புறக்கணித்தார் என்று ஒரு விமர்சனம் எழுந்தது. எல்லாம் மேலோட்டமான விமர்சனங்கள்.

கே: காலாவில் ரஜினி ரஞ்சித்தை பயன்படுத்தினாரா, ரஞ்சித் ரஜினியை பயன்படுத்திக்கொண்டாரா என்று ஒரு விவாதமும் எழுந்ததே…

 

திரைப்படம் என்பது டைரக்டர் மீடியம்தான். அதனால்தான் அத்தனை பேரின் கூட்டு உழைப்பையும் ஒருங்கிணைப்பது இயக்குநராக இருக்கிறார். ரஜினி போல ஸ்டார் நட்சத்திரமாக இல்லாமல் ஆரம்ப நிலை நடிகரை தேர்ந்தெடுத்தெடுத்திருந்தாலும் இதே போன்ற படத்தைத்தான் ரஞ்சித் எடுத்திருப்பார். காலாவில் அவர், ரஜினிக்காக எதையும் கூடுதலாக செய்யவில்லை..

கே: படைப்பாளியாக இந்த நாட்டு குடிமகனாக ரஜினி அரசியல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மிகவும் தவறான பல  கருத்துக்களை ரஜினி  முன்வைத்துவருகிறார்.  ஏ.சி. சண்முகம் கல்லூரியில் எம்.ஜி.ஆர். சிலையை திறந்துவைத்து அவர் பேசினார் அல்லவா? அது குறித்து ஒரு தொலைக்காட்சியில் “ரஜினிக்கு எத்தனை மார்க்” என்றார்கள்.. எவ்வளவு மைனஸ் என்று நினைக்கிறீர்களோ அவ்வளவு என்று பதில் கூறினேன்.

கே: உங்கள் திரைப்பயணத்தில் அடுத்து..?

ப: பெரிதாக ஏதும் எண்ணமில்லை. ஒத்த கருத்துடைய இயக்குநர் என்பதால் ரஞ்சித்துடன் இணைந்து பணியாற்றினேன். அதே போல நாம் ஏற்கும் கருத்துடையோர் அணுகினால் இணைந்து பணியாற்றலாம்.

மக்களுக்கான கருத்துக்களைச் சொல்ல திரைப்படமும் ஒரு வழி என்பதே என் கருத்து.. மற்றபடி திரைத்துறை குறித்து பெருங்கனவு ஏதுமில்லை.