டில்லி:

இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்  நிதி சீர்த்திருத்தம் தொடர்பாக பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.  நேற்று செய்தியாளர்களின் சந்திப்பின்போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.

வீடுகளுக்கு, வாகனங்களுக்குக் கடன், நுகர்பொருட்கள் விலைக்குறைப்பு, ஜிஎஸ்டி வரி தொடர் பான குறைபாடுகள் களைவதற்கான நடவடிக்கை, ஆர்பிஐ-யின் வட்டிக்குறைப்பு நேரடியாகக் கடன்வாங்குவோருக்குப் பயனளிக்க வசதிகள், வருமான வரி செலுத்துவோருக்கான விதிகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எளிமைப்படுத்தியுள்ளார்.

சர்வதேச அளவில் பொருளாதாரம் மந்தமாக உள்ளது என்று இந்தியா பொருளாதார வீழ்ச்சிக்காக சப்பைக்கட்டுகட்டிய அமைச்சர்,  உலக பொருளாதாரமே மந்தமாக உள்ளது என்றும், தற்போது, உலக பொருளாதார வளர்ச்சி 3.2 சதவீதமைக உள்ளது,  ஒன்றும் புதிது அல்ல என்று கூறியவர், உலக அளவில் பொருளாதாரம் மந்தமாக இருந்தாலும் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது என்று கூறினார்.

மேலும், அமெரிக்கா, சீனாவை விட இந்தியா பொருளாதாரம் நன்றாக உள்ளது. மந்த நிலை என்ற தகவல் தவறானது, என்று மறுப்பு தெரிவித்தார்.

பொருளாதாரத்தை உருவாக்குகிறவர்களை மதிக்கிறோம். அவர்களுக்கு ஊக்கம் தருகிற வகை யில் மத்திய பட்ஜெட் அமைந்தது. பொருளாதாரத்தை உருவாக்கும் பல்வேறு துறையினரின் தேவைகள் என்ன என்று அறிவதற்காக அவர்களுடன் ஆலோசனைகள் நடத்தி உள்ளேன். நாங்கள் சீர்திருத்த வேகத்தை இழந்து விடவில்லை என்று தெரிவித்தார். அனைத்து பிரச்சினைகளுக்கும் விரைவாக தீர்வு காணப்படும்.

வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கோரிக்கையை ஏற்று, பட்ஜெட்டில் அவர்களுக்கு உயர்த்தப்பட்ட கூடுதல் வரி (சர்சார்ஜ்) திரும்பப்பெறப்பட்டுள்ளது. பங்குகளை மாற்றுவதின் மூலம் வருகிற நீண்ட, குறுகிய கால மூலதன ஆதாயங்களுக்கான கூடுதல் வரி திரும்பப்பெறப்பட்டுள்ளது. பட்ஜெட்டுக்கு முந்தைய நிலை மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. இது மூலதன சந்தையில் முதலீட்டை ஊக்கு விப்பதற்காக, நிதி எண் 2 சட்டம் 2019- ஆல் வசூலிக்கப்  பட்ட கூடுதல் கட்டணத்தை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டுக்கு முந்தைய நிலை மீட்டமைக்கப்படுகிறது.

மேலும், வங்கிகள் அல்லாத நிதிநிறுவனங்கள் ஆதார் அங்கீகாரம் பெற்ற வங்கியின் கே.ஒய்.சி முறையைப் பயன்படுத்த அனுமதிக்கப்படும். இதனால்,  ஒவ்வொரு முறையும் ஆதார் அட்டை எடுத்துச் செல்வது தவிர்க்கப்படும்.

வாகன உற்பத்தி நிறுவனங்கள், தங்களது உற்பத்தியை குறைத்துள்ள நிலையில், ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர். இது தொடர்பாக கூறிய நிர்மலா,  பிஎஸ் 4 ரக வாகனங்களை அதன் பதிவுக்காலம் வரை பயன்படுத்தலாம் என்று கூறினார். வாகனப்பதிவுக் கட்டணம் ஜூன் 2020 வரை தள்ளி வைக்கப்படுவதாகவும் அறிவித்தார்.

பழைய வாகனங்களை மாற்றுவதற்கு புதிய வாகனங்கள் வாங்க அரசு துறைகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் வாங்குகிற பி.எஸ்-4 ரக வாகனங்கள், அவை பதிவு செய்யப்படுகிற ஒட்டுமொத்த காலத்திற்கும் இயங்க அனுமதிக்கப்படும்.

மின்சார வாகனங்கள், எரி பொருள் பயன்படுத்துகிற வாகனங்கள் என இரு வகை வாகனங்களும் தொடர்ந்து பதிவு செய்யப்படும்.

பழைய வாகனங்களை ஒழித்துக்கட்டுவது தொடர்பாக அரசு ஒரு கொள்கையை வகுக்கும்.

ஜிஎஸ்டி வரியில் உள்ள சிக்கல்கள் களையப்படும், எளிமைப்படுத்தப்படும். எளிதாக தொழில் தொடங்கும் சூழல் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும். நீண்டகால குறுகியகால மூலதன ஆதாயங்கள் மீது கூடுதல் வரி விதிப்பு இனி கிடையாது.

ஸ்டார்ட் அப் நிறுவன முதலீடுகளுக்கு வரிச் சலுகை வழங்கப்படும். சிறு, குறு நிறுவனங்களுக்கு பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள் தொடரும். மத்திய பட்ஜெட்டில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் அரசு நிறைவேற்றும்.

வரும் அக்டோபர் 1-ம் தேதியில் இருந்து வரி தொடர்பாக கொடுக்கப்படும் அனைத்து நோட்டீஸ்கள் மீதும், பதில் வந்த மூன்றே மாதத்தில் நடவடிக்கை. வரி சீர்திருத்தங்கள், தொழிலாளர் துறை சீர்திருத்தங்களும் தொடரும். அதிசெல்வந்தர்களுக்கான சூப்பர் ரிச் வரி விலக்கப்படும் என்று கூறியவர், தொழில் முனைவோருக்கான ஏஞ்செல் வரியும் விலக்கப்படும் என்றார்.

அக்டோபர் முதல்  அனைத்து வருமான வரி உத்தரவுகள், அறிவிப்புகள், சம்மன், கடிதங்கள் போன்றவை மையப்படுத்தப்பட்ட கணினி அமைப்பு மூலம் வழங்கப்படும்.

நடுத்தர தொழில்களுக்கான ஜிஎஸ்டி நிதி திருப்பியளித்தல் 30 நாட்களில் செய்யப்படும். பங்குசந்தையில் முதலீடு செய்வதற்கு ஊக்கம் தரப்படும். ஜி.எஸ். டி இன்னும் எளிமையாக்கப் படும். ஜி.எஸ்.டி கவுன்சிலோடு வரும் ஞாயிற்றுக்கிழமை கலந்தாலோசித்து, பணம் திரும்ப செலுத்தும் முறையில் உள்ள சிக்கல்கள் களையப்படும்.

மேலும், பொதுத்துறை வங்கிகள் மூலம் கூடுதல் கடன் விரிவாக்கம் சிஎஸ்ஆர் விதிமீறல்கள் குற்றம் என்பது நீக்கப்படும். கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு மீறல்கள் கிரிமினல் குற்றமாக கருதப்படாது. அதற்கு பதிலாக சிவில் குற்றமாகவே கருதப்படும்.

கம்பெனிகள் மீது வழக்குகள் தொடர்வதை விட அபராதம் விதிப்பதில் அரசு விருப்பம் கொண்டுள் ளது. கம்பெனி சட்டத்தின் படியான 14 ஆயிரம் வழக்குகளை நாங்கள் திரும்பப்பெற்றுள்ளோம்.

பொதுத்துறை வங்கிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்த மூலதன உதவி தொடரும். வங்கிகளுக்காக மூலதன உதவி மூலம் கடன் வளர்ச்சி அதிகரிக்கும். வங்கிகளின் மறுமூலதனத்துக்காக அரசு சார்பில் இருந்து ரூ.70, 000 கோடி உடனடியாக ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒரே நாளில் தொழில் நிறுவனம் தொடங்குவதற்கான சூழ்நிலை உள்ளது. சட்ட விதிகள் தொடர் பான அனைத்து சிக்கல்களும் உடனுக்குடன் களையப்படும் தொழிற்துறைக்கான நடைமுறை மூலதன கடன்களின் மீதான வட்டியும் இலகுவாக்கப்படும்.

வங்கிகள் ரெப்போ ரேட் விகிதம் (ரெப்போ ரேட் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தருகிற கடன்களுக்கான வட்டி விகிதம்) மற்றும் வெளிப்புற அளவுகோல்கள் வாடிக்கையாளர்களுக்கான கடன்களில் எதிரொலிக்க வகை செய்யப்படும். இதன் மூலம் வீட்டுக்கடன், வாகனக்கடன், சில்லரைக்கடன் வட்டி விகிதம் குறையும். தொழில் துறையினருக்கான மூலதனக்கடன்கள் வட்டியும் குறையும்.

வீடு, வாகனம் மற்றும் சில்லரைக் கடன்களுக்கான மாதாந்திர தவணைகளை இலகுவாக்கப்படும்.  வீட்டுக்கடன் நிதிநிறுவனங்களுக்கு ரூ.20,000 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்படும். இதன் மூலம் மொத்த ஆதரவு ரூ.30,000 கோடியாக இந்தத் துறைக்கு இருக்கும் என்று கூறினார்.

வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் கடன் வழங்குவதை ஊக்குவிக்கவும், பணப்புழக்கத்தை அதிகரிக்கவும் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.70 ஆயிரம் கோடி மூலதனம் வழங்கப்படும்.

இந்த நடவடிக்கை, மேலும் ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு நிதி அமைப்பில் கடன்கள் வழங்குதலையும், பணப்புழக்கத்தையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.

சிறுவணிகர்களுக்கு திரும்பத்தரவேண்டிய சரக்கு, சேவை வரி 30 நாளில் திரும்பத்தரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் புதிய அறிவிப்புகளை தொடர்ந்து, பங்கு சந்தை அளவுகோல் பிஎஸ்இ சென்செக்ஸ் ஆரம்பகால குறைந்த அளவிலிருந்து 228 புள்ளிகள் உயர்ந்துள்ளது.