டில்லி

நிதி நிலை அறிக்கையில் காணப்பட்ட 14 தவறுகளை ஊடகம் சுட்டிக் காட்டிய பிறகு நிதி அமைச்சகம் திருத்தி உள்ளது.

கடந்த 1 ஆம் தேதி அன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.   அப்போது அவர் தனது உரையில் சரியான விவரங்களே வலுவான நம்பிக்கையை அளிக்கும் என குறிப்பிட்டிருந்தார்.   தவறான விவரங்கள் அளிப்பதனால்  சொல்லப்படும் அனைத்து விஷயங்களுமே நம்பிக்கை அற்றதாகி விடும் என்பதற்காக அவர் இதைத் தெரிவித்திருந்தார்.

ஆனால் நிர்மலா சீதாராமன் அளித்த நிதிநிலை அறிக்கையில் சுமார் 14 தவறான விவரங்கள் உள்ளதை இந்தியா டுடே செய்தி நிறுவனம் கண்டுபிடித்துச் சுட்டிக் காட்டி இ மெயில் ஒன்றை அனுப்பி உள்ளது.    இந்த விவரங்களை அந்த நிறுவனம் மத்திய நிதி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையில் இருந்து எடுத்துள்ளது.

நிதிநிலை அறிக்கை பிடிஎஃப் மற்றும் எக்செல் வடிவங்களில் வெளியிடப்பட்டுள்ளது.  இதில் இரு வடிவங்களுக்கும் இடையில் பல தவறுகள் உள்ளன.   உதாரணமாக டில்லி சப்தர்ஜங் மருத்துவமனைக்கு பிடிஎஃப் வடிவத்தில் ரூ.1318.86 கோடி ஒதுக்கிடப்பட்டுள்ளதாகவும் எக்செல் வடிவத்தில் ரூ.1166.86 கோடி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.   இதில் வித்தியாசம் ரூ.152 கோடியாகும்.

இதைப் போல் டில்லி ஆர் எம் எல் மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் ரூ132 கோடி,  எய்ம்ஸ் மருத்துவமனை தொகையில் ரூ.290 கோடி, சண்டிகர் மருத்துவமனைக்கு  ரூ.125 கோடி வித்தியாசங்கள் காணப்பட்டன. இதைப் போல் 14 தவறுகளைக் கண்டுபிடித்த இந்தியா டுடே ஊடகம் இது குறித்து விளக்கம் கோரி இ மெயில் அனுப்பி இருந்தது.   இந்த மெயில் பிப்ரவரி 4 ஆம் தேதி காலை 11.12 மணிக்கு அனுப்பப்பட்டிருந்தது.  இதுவரை இதற்குப் பதில் வரவில்லை என ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் ஊடகம்  தெரிவித்த 14 தவறுகளும் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.    தற்போது பிடிஎஃப் வடிவத்தில் கொடுக்கப்பட்ட அதே தொகை எக்செல் வடிவத்தில் மாறப்பட்டுள்ளது.   செவ்வாய்க்கிழமை இரவு வரை இந்த  திருத்தம் நடைபெறவில்லை.   ஆனால் புதன் அதிகாலை இந்த மாற்றம் தென்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறு திருத்தம் செய்யும் போது அரசு அது குறித்த தகவலை அளிப்பது வழக்கமாகும்.  ஆனால் தற்போது எவ்வித விளக்கமும் இன்றி இந்த திருத்தத்தை மத்திய நிதி அமைச்சகம் ரகசியமாகச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.