பெட்ரோலிய பொருட்கள் படிப்படியாக ஜிஎஸ்டி.க்குள் வரும்….மத்திய நிதித்துறை செயலாளர்

டில்லி:

‘‘பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி.க்குள் கொண்டு வருவது குறித்து அனைத்து அதிகாரமும் கொண்ட ஜிஎஸ்டி கவுன்சில் பரிசீலனை செய்யும். இது படிப்படியாக நடக்கும்’’ என்று மத்திய நிதித்துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, விமான எரிபொருள் போன்றவை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்படவில்லை. இதற்கு மதிப்பு கூட்டு வரி விதிக்கும் அதிகாரம் மாநில அரசின் கையில் உள்ளது. இவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் மத்திய நிதித்துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா கூறுகையில்,‘‘பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி.க்குள் கொண்டு வர வேண்டும் என்ற ஒரு கோரிக்கை எங்கள் முன்பு உள்ளது. இது குறித்து பரிசீலனை செய்யப்படும். அனைத்தும் படிப்படியாக பல கட்டங்களாக நடக்கும். நாங்கள் நிறைய செய்துள்ளோம். இன்னும் நிறைய செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. அதை செய்வோம் என்ற நம்பிக்கையும் உள்ளது. அதை நோக்கி தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.

தானியங்கி முறையில் வரியை திரும்ப பெறும் நடைமுறை முதல் நாளிலேயே அமல்படுத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால் மக்கள் அதிக தவறுகளுடன் கணக்குகளை தாக்கல் செய்திருந்தனர். அதனால் வருமான வரித் துறையினர் நேரடியாக இந்த பணியில் ஈடுபட வேண்டிய கட்டாயம் கடைசி நேரத்தில் ஏற்பட்டுவிட்டது. எனினும் பிடித்தம் செய்யப்பட்ட வரியை திரும்ப கொடுக்கும் நடைமுறை முழுவதையும் தானியங்கி முறையில் கொண்டு வர முயற்சி செய்யப்படுகிறது. இது தான் எங்களது அடுத்த பணி’’ என்றார்.