ரஃபேல் விமான எண்ணிக்கை குறைப்புக்கு நிதி நிலையே காரணம்: அமைச்சர்

நாக்பூர்: அரசினுடைய நிதி நிலைமையின் அடிப்படையில்தான், ஃரபேல் விமானங்களை வாங்கும் எண்ணிக்கை 126 என்பதிலிருந்து 36 என்பதாக குறைக்கப்பட்டது என தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.

அவர் கூறியுள்ளதாவது, “அரசின் நிதி நிலைதான் ஒரு விஷயத்தை எப்படி செய்வது என்பதை தீர்மானிக்கும். எனவே, ரஃபேல் விமானங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதற்கு நிதி நிலைமைதான் காரணம்.

நாம் ஏன் 100 விமானங்களை வாங்கக் கூடாது என்று எப்படி உங்களால் கேட்க முடியும்? அதற்கான நிதி ஆதாரம் இருந்தால்தானே நம்மால் அதை செய்ய முடியும்? மேலும், பொருட்களை வாங்குவதில், முதற்கட்டம், இரண்டாம் கட்டம் மற்றும் மூன்றாம் கட்டம் போன்ற அம்சங்கள் உள்ளன.

நாம் எதற்காக ரஃபேல் விமானங்களையே அதிகம் வாங்க வேண்டும்? நாளையே, இதைவிட ஏதேனும் அதிக தொழில்நுட்பத்துடனும், விலை மலிவாகவும் விமானங்கள் கிடைத்தால், நாம் அதை வாங்கிக் கொள்ளலாமே? எதற்காக, நம் பணத்தையெல்லாம் இதிலேயே போட்டு முடக்க வேண்டும்?

ரஃபேல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தேர்தலுக்காக செய்யப்படுபவைதான். இவற்றை நான் ஏற்கனவே எதிர்பாத்தேன்” என்றார்.