திருக்குறளை உலகமொழிகளில் மொழி பெயர்க்க நிதிஉதவி! எடப்பாடி அறிவிப்பு

சென்னை:

திருக்குறளின் பெருமையை உலகம் முழுவதும் பரவச்செய்யும் வகையில், அதை உலக மொழிகளில் மொழி பெயர்க்க ஆண்டுதோறும் நிதிஉதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் தமிழ் வளர்ச்சித்துறை மானிய கோரிக்கையின்போது பதில் அளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

உலகப்பொது மறையான திருக்குறள் இதுவரை உலகில் 80 மொழிகளில் மட்டுமே மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.   இந்த நிலையில், திருக்குறளின் பெருமையை உலகம் அறியும் வகையில், ஆண்டுதோறும் ஒரு இந்தியமொழி மற்றும்  ஒரு உலக மொழியில் மொழிபெயர்த்து வெளியிடப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்து உள்ளார்.

நடப்பு ஆண்டில் இந்திய மொழிகளான அசாமி, சிந்தி மொழிகளிலும், உலக மொழியான ஈப்ரு மொழியிலும் திருக்குறள் மொழிபெயர்ப்பு செய்யப்படும் என்று தெரிவித்துள்ள முதல்வர், அதற்காக ரூ.50 லட்சம் வழங்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.

மத்திய அரசிடம் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டுமென்று பல ஆண்டுகளாக செம்மொழி தமிழாய்வு நிறுவனம் வலியுறுத்தி வருகிறது. அதைத் தொடர்ந்து,  மத்திய அரசு இந்தியாவில் பட்டியலிடப்பட்டுள்ள 22 மொழி ளில் திருக்குறளை மொழி பெயர்க்கும் பணியினை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திடம் கடந்த ஆண்டு (2018) மத்திய அரசு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.