தலைமறைவு ஃபைனான்சியர் அன்புச்செழியன் நண்பரை வளைத்தது காவல்துறை

சென்னை,

லைமறைவாக இருக்கும் சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியனின் நண்பர் முத்துக்குமாரை காவல்துறை பிடித்து விசாரித்து வருகிறது.

நடிகர் சசிகுமாரின் உறவினரும் அவரது படத்தயாரிப்பு பணிகளை நிர்வகித்து வந்தவருமான அசோக்குமார் கடந்த 21ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். தங்களுக்கு கடன் கொடுத்த ஃபைனான்சியர் அன்புச்செழியன், பாக்கித் தொகைக்காக மிரட்டியதால் தற்கொலை செய்துகொண்டதாக கடிதம் எழுதி வைத்திருந்தார்.

இதையடுத்து அன்புச்செழியன் மீது காவல்துறை வழக்கு பதிந்தது. இந்தநிலையில் அன்புச்செழி யன் தலைமறைவாகிவிட்டார். அவரைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அன்புச்செழியனின் நண்பர் முத்துக்குமாரை காவல்துறை சுற்றிவளைத்து கைது செய்துள்ளது. கட்டுமான தொழில் செய்துவரும் முத்துக்குமாரின் அலுவலகம் சென்னை ஜாபர்கான் பேட்டையில் உள்ளது.

அன்புச்செழியன் தலைமறைவான பிறகு ஐதராபாத் சென்றதை காவல்துறை கண்டுபிடித்தது. அப்போது அவருடன் முத்துக்குமாரும் சென்றதையும் காவல்துறை கண்டுபிடித்தது.

இந்த நிலையில் சென்னை ஜாபர்கான்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்துக்கு வந்த முத்துக்குமாரை, காவல்துறை சுற்றி வளைத்தது.

ஐதராபாத்தில்தான் தற்போதும் அன்புச்செழியன் இருக்கிறாரா அல்லது வேறு இடத்துக்குத் தப்பிச் சென்றுவிட்டாரா என்று முத்துக்குமாரிடம் காவல்துறை விசாரித்து வருகிறது.

இதற்கிடையே அன்புச்செழியன் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிவிடாதபடி, விமானநிலையங்களை காவல்துறை உஷார் படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.