வாக்கிங்  போனா அபராதம்.. சென்னையில் புது களேபரம்..  

வாக்கிங்  போனா அபராதம்.. சென்னையில் புது களேபரம்..

மாதிரி புகைப்படம்

கொரோனா ஊரடங்கினால் பெரும்பாலானவர்கள் வேலைக்குச்செல்ல முடியாமலும், பணி சம்பந்தமான தினசரி நடவடிக்கைகள் ஏதுமின்றியும் உடலளவில் சோர்ந்து காணப்படுகின்றனர்.  இந்நிலையில் இவர்களின் ஒரே ஆறுதல் நடைப்பயிற்சி தான்.  இப்போது அதற்கும் வந்து விட்டது தடா.

வியாழனன்று அதிகாலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.  அது சென்னை பெருநகர மாநகராட்சி அதிகாரிகள், நடைப்பயிற்சி சென்ற மக்களுக்கு விதித்த அபராதம் தான்..

தி நகரில் வசிக்கும் ஒருவருக்கு வாக்கிங் போனதற்காக என்று ரூ .100 அபராதம் விதிக்கப்பட்டது.  அவருக்கு வழங்கப்பட்ட ரசீதில் தெளிவாக, ‘விதிகளை மீறி நடைப்பயிற்சி மேற்கொண்டதற்காக’ என்று குறிப்பிட்டே கொடுத்துள்ளனர். மற்றொரு சென்னைவாசிக்கு இதே போல ‘காலை நடைப்பயிற்சி’ செய்ததற்காக ரூ .300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னையில் வீட்டிற்கு வெளியே வந்து பொதுமக்கள் நடைப்பயிற்சி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மீறி நடைப்பயிற்சி சென்றால் அபராதம் வசூலிக்கப்படும் என்று எச்சரித்தார்.

சென்னையில் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதைத் தடுப்பதற்கு இந்த உத்தரவைச் சென்னை மாநகராட்சி இப்படி ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதனால் வாக்கிங் போகாமல் வீட்டுக்குள்ளே முடங்கும் நிலையில் சென்னை வாசிகள் தவித்து வருகின்றனர். சென்னையில் பெரிய அளவில் உடல் உழைப்பே இல்லாமல் சர்க்கரை நோய் உள்பட பல்வேறு நோய்களுக்கு ஆளாகியுள்ள பலர், நடைப்பயிற்சி அவசியம் என்று விரும்புகிறார்கள்.  ஆனால் கொரோனா அதிகம் பரவுதல் காரணமான அதற்குச் சென்னை மாநகராட்சி அனுமதி அளிக்கவில்லை.

– லெட்சுமி பிரியா