பாட்னா:

பிரதமர் மோடிக்கு எதிராக உயர்த்தப்படும் விரல்கள் உடைக்கப்படும், கைகள் வெட்டப்படும் என்று பாஜக பீகார் மாநில தலைவர் நித்யானந்த ராய் பேசியுள்ளார்.

பீகாரில் வைஷ்ய மற்றும் கானு சமுதாய மக்கள் நிகழ்ச்சியில் அம்மாநில பாஜக தலைவரும், உஜியர்ப்பூர் தொகுதி எ.பி.யுமான நித்யானந்த ராய் கலந்து கொண்டு பேசுகையில், ‘‘ நாட்டை வழிநடத்த பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இது அனைவருக்கும் பெருமை அளிக்கும் விஷயமாகும். மோடிக்கு எதிராக யாரேனும் விரல் அல்லது கைகளை உயர்த்தினால் அதை உடைக்க வேண்டும் அல்லது வெட்ட வேண்டும்’’ என்றார்.

நித்யானந்த ராய் மேலும், பேசுகையில், விரலை உடைக்க வேண்டும். கைகளை வெட்ட வேண்டும் என்பது பழமொழி தான். நாட்டின் பெருமை மற்றும் பாதுகாப்பு எதிராக செயல்படுபவர்களிடம் இதை நாம் வலுவாக பயன்படுத்த வேண்டும்.

மோடியின் உணர்வுப்பூர்வமான பயணத்தை நன்கு அறிந்துகொண்ட பின்னர் நாட்டின் முன்னேற்றத்தை பார்த்துவிட்டு தான் இங்கு பேசுகிறேன். நான் கூறிய கருத்துக்கள் எந்த வித தனி நபருக்கோ, எதிர்கட்சிகளுக்கோ கிடையாது.

இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சுஷில் மோடி கலந்துகொண்டு பேசுகையில், ‘‘ கானு சமுதாய மக்களில் ஒருவருக்கு கூட தேர்தலில் போட்டியிட ராஷ்ட்ரீய ஜனதா தளம் வாய்ப்பு அளிக்கவில்லை’’ என்றார்.

ராய் கருத்துக்கு ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் பதில் கூறுகையில், ‘‘ நாட்டின் பெருமை என்று ஒன்று இல்லாத போது அதை பற்றி பாஜக எப்படி பேலாம்’’ என்றார்.