வாக்குச்சாவடி முறைகேடு – பா.ஜ. அமைச்சர் மீது வழக்குப் பதிவு

ரோடக்: ஹரியானாவின் ரோடக் மாவட்டத்தில் வாக்குச்சாவடியை கைப்பற்றியதாக, மாநில பாரதீய ஜனதா அமைச்சர் மணிஷ் குரோவர் மற்றும் முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பாரத் பூஷன் பத்ரா ஆகியோர் மீது காவல்துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரோடக் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜஷன்தீப் சிங் ரண்டவா இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

வாக்குச் சாவடிக்குள் அனுமதியின்றி நுழைந்து வாக்காளர்களை மிரட்டியதாக, துணை தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில், அந்த இரண்டு தலைவர்களின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தலின்போது, மே மாதம் 12ம் தேதி பாரதீய ஜனதா அமைச்சர் தனது அடியாட்களுடன் வாக்குச் சாவடிக்குள் நுழைந்து, வாக்காளர்களை மிரட்டியதாகவும், அப்போது அங்கே வந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாரத் பூஷன், அமைச்சருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.