படப்பிடிப்பின்போது தீ விபத்து: பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் உயிர் தப்பினார்

‘கேசரி’ இந்தி படத்தில் அக்ஷய் குமார்

பாலிவுட் பிரபல நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்கும் ‘கேசரி’ என்ற இந்தி  படத்தின் படபிடிப்பு புனே அருகே உள்ள கிராமப்பகுதியில் ஷெட் அமைத்து  நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படப்பிடிப்பின்போது, அந்த சினிமா ஷெட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்ட வசமாக எந்தவித பாதிப்புமின்றி நடிகர் அக்ஷய் குமார் உயிர் தப்பினார்.

இந்த  எதிர்பாராத தீ விபத்து காரணமாக பலலட்சம் மதிப்பில் போடப்பட்டிருந்த சினிமா செட் முற்றிலும் சேதமடைந்தது.

புனே அருகே, சதாரா மலைப்பிரதேசத்தில் உள்ள புத்ருக் கிராமத்தில் சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட்ட போது,  படபிடிப்பு தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாகவும், சண்டை காட்சியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த பயங்கர தீ விபத்தில் படப்பிடிப்பு குழுவினர் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக தப்பியதாக கூறப்படுகிறது.